ஹரப்பான் தோற்க வேண்டும் என்பதற்காகவே பாஸ் சுங்கை கண்டீசில் போட்டியிடவில்லையாம்

பாஸ்  சுங்கை  கண்டீஸ்   இடைத்   தேர்தலில்   களமிறங்கி   வாக்குகளைச்  சிதறடிக்க  விரும்பவில்லை    என  அக்கட்சி   தகவல்   தலைவர்   நஸ்ருடின்   ஹசான்  கூறினார்.

சிலாங்கூர்   சட்டமன்ற  இருக்கைக்காக    நடக்கும்   இடைத்   தேர்தலில்   மக்கள்  ஹரப்பானைத்   தோற்கடிக்க   வேண்டும்   என்பதை   வலியுறுத்தி  நஸ்ருடின்  இன்று   முகநூலில்   பதவிட்டிருந்தார்.

“அத்தோல்வி   தேர்தல்   வாக்குறுதிகளை   நிறைவேற்றாமல்  இருப்பதை  மக்கள்   பொறுத்துக்கொள்ள  மாட்டார்கள்   என்பதற்கான   குறியீடாக  அமையும்”,  என்றவர்  அப்பதிவில்  கூறினார்.  கூடவே,  “யார்  வேண்டுமானாலும்  வெல்லட்டும்,  ஹரப்பானைத்   தவிர”  என்ற  சுலோகமும்    இடம்பெற்றிருந்தது.

ஹரப்பான்  வாக்குறுதி   அளித்ததுபோல்  டோல்களை  ஒழிக்கவில்லை,  எரிபொருள்   விலைகளைக்  குறைக்கவில்லை,  பெல்டா  குடியேறிகளின்  கடன்களை  இரத்துச்   செய்யவில்லை  என்று   நஸ்ருடின்   குறிப்பிட்டிருந்தார்.

ஆனால்,  ஹரப்பான்   அதன்  தேர்தல்    அறிக்கையில்   எரிபொருள்  விலை  குறைக்கப்படும்   என்று  கூறவே  இல்லை. 125 சிசிக்குக்  குறைவான   மோட்டார்  சைக்கிள்களுக்கும்   1300 சிசிக்கும்  குறைவான   வாகனங்களுக்கும்   நிதியுதவி   செய்யப்படும்  என்றுதான்   அது  கூறியிருந்தது.

அதேபோல்     பெல்டா  குடியேறிகளின்  கடன்சுமை  குறைக்கப்படும்  என்றும்   டோல்  கட்டணங்கள்   கட்டம்  கட்டமாக    அகற்றப்படும்   என்றும்தான்  அது  கூறியது.