முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தம் ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அரசாங்க இயந்திரத்தையே “கெடுத்துச் சுட்டிச்சுவராக்கி” விட்டார் எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதனால்தான் பல அரசாங்க அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டியிருப்பதாகவும் எல்லாவற்றையும் சரிசெய்து அரசாங்கம் பழைய நிலைக்குத் திரும்ப நாளாகும் என்றும் அவர் சொன்னார்.
“நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு நாங்கள் நினைத்ததைவிட மோசமாக உள்ளது. பணம் பில்லியன் கணக்கில் காணாமல் போயிருப்பதுடன் அரசாங்க இயந்திரமும் முறையாக செயல்பட முடியாத அளவுக்குக் கெடுக்கப்பட்டுள்ளது.
“முந்திய அரசாங்கத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்த பல அதிகாரிகளை அகற்ற வேண்டியுள்ளது . முந்திய அரசாங்கத்தின் நாசச் செயல்களுக்குத் துணை போனவர்கள் என்பதால் அதைச் செய்ய வேண்டியுள்ளது.
“எனவே, மீட்சிபெற சிறிது காலம் பிடிக்கும். நஜிப் தவறாகப் பயன்படுத்தி அரசாங்க இயந்திரத்தையே கெடுத்து விட்டார்”, என்றாரவர்.