ஹரப்பான் அரசாங்கத்தை அமைத்ததிலிருந்து 18 உயர்மட்ட அரசு அதிகாரிகளை அவர்களின் பதவியிலிருந்து நீக்கியுள்ளது என்று நடப்பில் சட்ட அமைச்சர் லியு வுயி கியோங் இன்று கூறினார்.
நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் அளிக்கப்பட்ட பதிலிருந்து நீக்கப்பட்ட 18 அதிகாரிகள் ஒருவர் பிரதமர் துறையைச் சேர்ந்தவர்.. “பொது நலம்” கருதி அவரது வேலை ஒப்பந்தம் முடிக்கப்பட்டது என்று லியு குறிப்பிட்டார்.
அதே துறையைச் சேர்ந்த இன்னும் எண்மரின் ஒப்பந்தக் காலம் குறைக்கப்பட்டது; அதே போன்ற நடவடிக்கை வெளிவிவகார அமைச்சிலிருந்து ஐவர், நிதி அமைச்சிலிருந்து இருவர், உள்துறை அமைச்சிலிருந்து ஒருவர் மற்றும் தொடர்புகள் மற்றும் பல்லூடக அமைச்சிலிருந்து இன்னொருவர் மீது எடுக்கப்பட்டன என்று அவர் விபரம் அளித்தார்.
வேலையிலிருந்து நீக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஜிஎல்சி அதிகாரிகளின் பட்டியல் வேண்டுமென்று ஹஸ்புல்லா ஓஸ்மான் (பிஎன்) கேட்டிருந்ததற்கு அமைச்சர் அளித்த பதிலில் அவர் இவ்வாறு கூறினார்.
நிதி அமைச்சின் ஒன்றிணைக்கப்பட்ட வாரியத்திலிருந்து 24 பேர் பதவி துறந்தனர்
ஜூலை 9 வரையில், டிஎன்பி வாரியத்திலிருந்து இருவர், மலேசியன் ஏர்போர்ட் ஹோல்டிங்ஸிலிருந்து அதன் நிருவாக இயக்குனர் ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
நிதி அமைச்சில், 1எம்டிபி தலைமை அதிகாரி அருள் கந்தா கந்தசாமியின் ஒப்பந்தம் துண்டிக்கப்பட்டது.
நிதி அமைச்சின் ஒன்றிணைக்கப்பட்ட வாரியத்திலிருந்து 24 பேர் தாங்களாகவே பதவியிலிருந்து விலகிக் கொண்டனர்.
ஹரப்பான் அரசாங்கம் அமைத்ததிலிருந்து இன்னும் சில உயர்மட்ட அரசாங்க மற்றும் ஜிஎல்சி அதிகாரிகள் இராஜினாமா செய்துள்ளனர் அல்லது அகற்றப்பட்டனர்.
அவர்களில் கஜனாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் இர்வான் செரிகர் அப்துல்லா, முன்னாள் தாபுங் ஹஜி தலைவர் அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம் மற்றும் பிஎன்பி தலைவர் அப்டுல் வாஹிட் ஒமாரும் அடங்குவர்.