சுங்கை கண்டீஸ் பிஎன் வேட்பாளர் லொக்மான் நூர் ஆடம், தாம் ஒரு இனவாதி அல்ல என்றும் மலாய்க்காரர் மற்றும் முஸ்லிம்களின் அரசமைப்புப்படியான விவகாரங்கள் மீறப்படாமல் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளும் ஒரு கண்காணிப்பாளர் என்றும் கூறினார்.
சமூகக் கலவரங்களைத் தவிர்க்க மலாய்க்காரர் மற்றும் முஸ்லிம்களின் அரசமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம் என்றாரவர்.
“சிலர் என்னை இனவாதி என்கிறார்கள். கூட்டரசு அரசமைப்பின்படி நடந்து கொள்கிறேன், அவ்வளவுதான்.
“(என்னைப் போன்றோர் இல்லையென்றால்) மலாய்க்காரர்- அல்லாதார் பாடு ஆபத்தாகி விடும். அமைதியைக் கட்டிக்காக்கும் என்னைப் போன்றோரை மலாய்க்காரர்- அல்லாதார் பாராட்ட வேண்டும்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
பிஎன் ஆட்சியில் இருந்தபோது, பேரரசர் நிலை, மலாய்க்காரர் உரிமைகள், பகாசா மலேசியா முதலியவற்றை எதிர்க்கும் செயல்கள் சட்டப்பூர்வமாக முளையிலேயே கிள்ளி எறியப்பட்டன.
இப்போதைய பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் அவற்றைத் தடுப்பதாக தெரியவில்லை.
இதற்கு ஓர் எடுத்துக்காட்டு அரசாங்க ஆலோசகர் மன்றத்தின் முன்னாள் பேச்சாளர் ஏ.காடிர் ஜாசின் சட்டத்துறைத் தலைவராக டோம்மி தாமஸ் நியமிக்கப்பட்டதால் எழுந்த சர்ச்சையின்போது எழுதிய கட்டுரை.
அக்கட்டுரையில், காடிர் அரசாங்கம் பேரரசருக்கு 18-மாத காலத்தில் ரிம256 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டபதாகக் கூறியிருந்தார். ஆனால், அந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது என்பதை அவர் குறிப்பிடவில்லை.
கருவூலத்தின் தகவலின்படி பேரரசருக்கு ஆண்டுக்கு ரிம13.5 மில்லியன்தான் ஒதுக்கப்படுகிறது.
காடிரின் கட்டுரை, அரசமைப்பு மன்னராட்சியை ஏன் பாதுகாக்கிறது என்பது பற்றி விரிவாக அலசி ஆராய்ந்தது என்றாலும் அது மன்னராட்சிக்கு எதிரானது என்று குறைகூறப்பட்டது. அதனால் காடிர் ஆலோசகர் மன்றத்திலிருந்து விலக நேரிட்டது.
“அவரது செயல் மலாய்க்கார்களுக்குச் சினமூட்டியது. காடிர் ஜாசின் ஆலோசனை மன்றத்திலிருந்து விலகியது உண்மைதான். ஆனால், இன்றுவரை அவர் கைது செய்யப்படவில்லை”, என லொக்மான் கூறினார்.