அரசாங்கத்தின் ஆலோசனை மன்றம் அளவுமீறிய செல்வாக்குடன் விளங்குவதாக கவலைகொள்ளும் கைரி ஜமாலுடின்(பிஎன் -ரெம்பாவ்) அது “தேர்ந்தெடுக்கப்படாத, யாருக்கும் காரணம்கூற வேண்டிய அவசியமில்லாத” ஓர் அமைப்பு என்று வருணித்தார்.
இன்று காலை மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய கைரி, சிஇபி தலைவர் டயிம் சைனுடின், நாட்டின் உயர் நீதிபதிகளைக் கூப்பிட்டு அவர்களைப் பணிவிலகுமாறு உத்தரவிட்ட சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினார்.
“அது ஒரு ஆலோசனை அல்ல, உத்தரவு. அத்தனையும் பதிவாகியுள்ளது”, என்றார்.
சிஇபி-இன் இன்னொரு உறுப்பினர் ஸெட்டி அக்தார் அசீஸ், இரண்டு அரசுதொடர்புடைய இரண்டு நிறுவனங்களுக்கு- பெர்பாடானான் நேசனல் பெர்ஹாட் (பிஎன்பி), சைம் டார்பி புரொபர்டிஸ்- தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது எப்படி என்றும் கைரி வினவினார்.
அவருக்கு மறுமொழி கூறிய பிரதமர்துரை அமைச்சர் லியு வூய் கியோங். சிஇபி ஒரு ஆலோசகர் மன்றம்தான் என்பதை வலியுறுத்தினார்.
“இதற்குமுன்பே 1எம்டிபிமீதுகூட பல ஆலோசனைக் குழுக்களை அமைத்திருக்கிறோம். ஆலோசனை கூறுவதுதான் அதன் பணி. அதற்கு அது யாருக்கும் காரணம் கூற வேண்டும் என்பதில்லை.
“அவர்களின் ஆலோசனைகள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது. அரசாங்கம் அவர்களின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் காதுகொடுத்துக் கேட்கும். ஆனால் முடிவுகளை அதுதான் செய்யும்”, என்றார்.
அந்த விளக்கத்தால் மனநிறைவடையாத கைரி, கடந்த வாரம் டயிம் சீனா சென்று சீன ஆரசாங்கத்துடன் பேச்சு நடத்தியது குறித்து வினவினார்.
“அதுவும் ஆலோசகர் பணிதானா? ஆலோசனை சொல்லத்தான் சென்றாரா?”, என கைரி கேட்டார்.
பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் பணித்ததால் டயிம் சீனா சென்றதாக லியு கூறினார்.
மேலும் அவர், ஹரப்பானின் 100 நாள் ஆட்சிக்குப் பிறகு அம்மன்றம் கலைக்கப்படும் என்றும் சொன்னார்.