சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் ஸக்கீர் நாயக்கைத் திருப்பி அனுப்பச் சொல்லி இந்திய அரசாங்கம் மனுச் செய்துக்கொள்ளவில்லை என புக்கிட் அமான் போலீஸ் கடிதமொன்று கூறுகிறது.
கூட்டரசு போலீசின் சட்டப் பிரிவு ஜூலை 13 தேதியிட்டு அனுப்பிய அக்கடிதத்தை ஸக்கீரின் வழக்குரைஞர் முகமட் கைருல் அசாம் அப்துல் அசீஸ் அவரது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.
“உங்கள் கவனத்துக்கு, சரிபார்த்ததில் உங்கள் கட்சிக்காரரைத் திருப்பி அனுப்பச் சொல்லி இந்திய அரசாங்கத்திடமிருந்து எந்தக் கோரிக்கையும் இதுவரை வந்ததில்லை என்பது தெரிகிறது.
“இவ்விவகாரம் தொடர்பில் நீங்கள் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திடமும் விசாரிப்பது நல்லது”, என ஏசிபி முகமட் பாஹ்மி விசுவநாத அப்துல்லா கையெழுத்திட்டிருந்த கடிதம் கூறியது.
இது, இந்திய அரசாங்கம் இந்தியாவில் பிறந்த சமயப் போதகரை திருப்பி அனுப்பக் கோரி மலேசிய அரசாங்கத்திடம் மனுச் செய்திருப்பதாகக் கூறியிருப்பதுடன் முரண்படுகிறது.
ஜூலை 13-இல் மலேசியாகினி இந்திய வெளியுறவுத் துறைப் பேச்சாளர் ஸ்ரீ ரவீஷ் குமாரைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது ஜனவரி மாதமே அதிகாரப்பூர்வ கோரிக்கை அனுப்பப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
ஸாகீர், இந்தியாவில் கருப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்றதாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததாகவும் சமய உணர்வுகளைத் தூண்டிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
ஆனால், அவர் அக்குற்றங்களை மறுத்தார்.