– கி.சீலதாஸ், ஜூலை 24, 2018.
டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் பிரதமரான காலத்திலிருந்து சிறுபான்மையினர் மீதான மதிப்பு பாதிப்புற்ற நிலையை அடைந்தது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. சிறுபான்மையினரின் சமய நம்பிக்கைகூட ஏளனத்திற்கும், இழி நிலைக்கும் உட்படுத்தப்பட்டது மக்கள் மறந்திருக்க முடியாது. இந்தக் கொடுமையான நிலையை சிறுபான்மையினர் சகித்துக் கொண்டிருந்தபோது, இந்தியாவில் இருந்து ஸாகிர் நாயக் இந்நாட்டிற்கு வந்து இன, சமயங்களுக்கு இடையே பகைமை வளர்க்கும் வகையில் உரை ஆற்றியது, அதைக் கண்டுகொள்ளாத நஜீப் அரசு சிறுபான்மையினரின் சங்கடத்தைத் தீர்க்க யாதொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஸாக்கிர் நாயக் ஒரு பிரமுகர்போல் ராஜமரியாதையுடன் நடத்தப்பட்டார். அவரோ மலேசியாவின் சிறுபான்மை சமயத்தினரை ஒதுக்கினார், ஓரங்கட்டினார். பகைமை உணர்வுக்கு வித்திட்டார் என்றால் மிகையாகது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நாட்டின் பதினாங்காம் பொதுத்தேர்தல் வந்தது.
அந்தப் பொதுத்தேர்தலுக்கு முன்னர் நம்பிக்கை கூட்டணி அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது என்ன? இந்த நாட்டை மறுசீரமைப்போம். மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வோம் என்று டாக்டர் மகாதீர் கூறினார். தமது இருபத்து ஆண்டுகால ஆட்சியின்போது நிகழ்ந்த தவறுகளுக்கு மன்னிப்பு கோரினார் டாக்டர் மகாதீர். அதுமட்டுமா? நம்பிக்கை கூட்டணி நாடு ஒன்றுபடவும் எல்லோரும் இணைந்தச் சமுதாயத்தைக் காண விழையும் என்றும் உறுதியளித்தது. அதற்கு முக்கியத்துவம் தந்தார் மகாதீர்.
எல்லோரும் இணைந்து செயல்படவேண்டும் என்றால் எல்லோரும் ஒருவரை ஒருவர் அரவணைத்து செயல்படவேண்டுமே அன்றி அங்கே பிளவுக்கு இடம் அளிக்கக்கூடாது. அப்படிப்பட்ட போக்கை கைவிடுவது மட்டுமல்ல இம்மியளவும் ஆதரிக்கக்கூடாது.
ஸாகிர் நாய்க் இந்த நாட்டில் நிரந்தர குடிவாசியாக அனுமதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அவர் மக்களிடையே மனக்கசப்பை, வேறுபாட்டை, விரோதத்தை வளர்க்கும் விதத்தில் பேசுவதோ, நடந்துகொள்வதோ ஏற்றுக்கொள்ள முடியாது. பேச்சுரிமை என்பது இந்த நாட்டு குடிமக்களுக்கு மட்டுமே உரியது, நிரந்தர குடிவாசியான அயல் நாட்டுக்காரருக்கு அந்த உரிமை கிடையாது. அதே சமயத்தில் பிற சமயங்களை இழிவுப்படுத்தவோ அவற்றிற்கு சவால்விடவோ அவருக்கு உரிமையில்லை. இந்த நாட்டு குடிமக்களுக்கு இல்லாத உரிமையை அயல் நாட்டுக்காரருக்கு வழங்குவது விசித்திரமாகும்!
டாக்டர் மகாதீர் ஸாகிரைப் பற்றி குறிப்பிடுகையில் அவர் மலேசியாவின் நிரந்தர குடிவாசி என்பதாலும், அவர் வேறொரு நாட்டில் எவ்வாறு நடந்துகொண்டார் என்பதை ஆழ்ந்து கவனிக்க வேண்டும் என்கிறார். மகாதீர் சொல்வதில் நியாயம் இருக்கலாம். ஆனால், அவர் ஒரு நல்ல, நியாயமான அணுகுமுறையை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும். அதாவது ஸாகிர் இந்த நாட்டில் நிரந்தர குடிவாசியாக இருக்கும் காலத்திலும் சரி, ஒரு வேளை இந்நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டாலும் சரி அவர் பிற இனத்தினரை, சமயத்தினரை, பிற சமயங்களை இழிவுப்படுத்துவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். அவர் தமது சமயத்தைப் பற்றி வேண்டுமானால் புகழ்ந்து பாடட்டும். பிற சமயங்களையோ, பிற சமயத்தினரயோ அவர் சீண்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். நிறுத்தும்படி இந்த நம்பிக்கை கூட்டணி அரசு செயல்படவேண்டும். மகாதீர் அப்படிப்பட்ட ஒரு நல்ல நடவடிக்கையை மேற்கொள்வாரேயானால் சிறுபான்மையினர் மகிழ்வர். மகிழ்வது மட்டுமல்ல நஜீப்பின் தவறான முறைக்கு எக்காலத்திலும் இடமில்லை என்பதயும் உறுதிப்படுத்தும்.
தமிழ் இனத்தைச் சீண்டிப்பார்ப்பவர்களை நாடு கடத்த வேண்டும்.நாங்கள் பிற மதத்தினரைச் சீண்டிப்பார்க்கிறோமா?எல்லா இனமும் ஒற்றுமையாய் வாழ நாடு விரும்ப்புவதை சிலர் விரும்புவதில்லை.இவர்களை துன் மஹாதீர் கண்டிக்க வேண்டும்.