1மலேசியா கிளினிக்குகளை மூட, சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் குற்றச்சாட்டை அவ்வமைச்சு மறுத்துள்ளது.
எனினும், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, சில சமூகக் கிளினிக்குகளை மூடுவதற்கான திட்டங்கள் இருப்பதை உறுதிப்படுத்தினார்.
“இதுவரை அடையாளம் காணப்பட்ட எந்தவொரு சமூகக் கிளினிக் அல்லது 1மலேசியா கிளினிக்கை மூடுவதற்கு சுகாதார அமைச்சு உத்தரவு வழங்கவில்லை.
“சுகாதார அமைச்சின் உயர் நிர்வாகத்தால் இந்த மறுபரிசீலனை செம்மைபடுத்தப்பட்டு, இறுதி முடிவு செய்யப்பட வேண்டும்,” என்று நூர் ஹிஷாம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சிலாங்கூரில் இன்று, 1மலேசியா கிளினிக்குகள் ஆகஸ்ட் 16 அல்லது செப்டம்பர் 1 முதல் முடக்கப்படலாம் என்று ஓர் எச்சரிக்கை அறிவிக்கை பரவத் தொடங்கியது.
நோயாளிகள் அருகில் இருக்கும் அரசாங்க சுகாதார மருத்துவமனைகளை நாட வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மேலும் கூறுகையில், சேவை முடக்கம் செய்யப்படவுள்ள கிளினிக்குகள் குறிப்பிட்ட சில அளவுகோல்களை எட்ட வேண்டும்: குறைந்த நோயாளிகள் வருகை, அருகில் வேறு சில சுகாதார வசதிகள் மற்றும் உயர் வாடகை அல்லது செயல்பாட்டு செலவுகள் போன்று, என்றும் நூர் ஹிஷாம் தெளிவுபடுத்தினார்.
1மலேசிய கிளினிக்குகளின் தரத்தை உயர்த்தி, அங்கு பல்வகை சேவைகளையும் சிகிச்சைகளையும் வழங்கவும் சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் திட்டம் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, அதிகமான மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருந்தாளர்களை அல்லது உதவி மருந்தாளர்களை சமூகக் கிளினிக்குகளுக்கு அனுப்பவும் திட்டம் உள்ளதாக அவர் மேலும் சொன்னார்.
தற்போது நாடு முழுவதிலும் 347 1மலேசிய கிளினிக்குகள் செயல்பட்டு வருகின்றன.