விடுதலைப் புலிகள் பற்றி இராமசாமியிடம் டிஎபி விளக்கம் கோருகிறது

 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பினாங்கு துணை முதலமைச்சர் 2 ஆதரவு அளிக்கிறார் என்று அவர் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்கு டிஎபி அவரிடமிருந்து விளக்கம் கேட்டுள்ளது.

இராமசாமியால் சரியான விளக்கம் அளிக்க முடியும் என்று பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் யியோவ் நம்பிக்கை கொண்டுள்ளார்.

“அவரிடமிருந்து விளக்கம் பெற விரும்புகிறவர்களுக்கு அவர் விளக்கம் அளிப்பது நல்லது, ஏனென்றால் அரசியலில் இறங்குவதற்கு முன்பு அவர் அமைதிப் பேச்சுகளில் பங்கேற்றுள்ளார், அதுவும் சிறீ லங்காவில் மட்டுமல்ல, ஆச்சேயிலும் பங்கேற்றுள்ளார், ஆகவே அவரிடம் சரியான பதில் இருக்கும் என்று நான் நம்புகிறேன்”, என்று மாநில டிஎபி தலைவர் தெரிவித்ததாக இன்று சினார் ஹரியான் செய்தி கூறுகிறது.

இராமசாமி குறித்த டிஎபியின் நிலைப்பாடு என்ன என்று பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஸைனால் அபிடின் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.

புத்ரா ஜெயா இஸ்லாமிய சமய போதகர் ஸக்கீர் நாய்க்கை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மறுத்ததை இராமசாமி குறைகூறியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக இக்குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன.