தனது சேவை மையத்தை, தன் தந்தை ஆக்கிரமிக்கிறார் என்று சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்தியை, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி பிரபாகரன் மறுத்துள்ளார்.
பிரபாகரன், 22, ஒரு தொழிலதிபரான அவரது தந்தை, ஊழியர்கள் பற்றாக்குறையின் காரணமாகவே சேவை மையத்தை ஒருங்கிணைக்க உதவுகிறார் என்று விளக்கம் தந்துள்ளார்.
“தற்போது, என் சேவை மையத்தில் 4 ஊழியர்களே உள்ளனர். வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நான் என் தொகுதி மக்களைச் சந்திக்கிறேன். ஆக, என் அப்பா என் அலுவலகத்தை ஒருங்கிணைக்க உதவியாக இருக்கிறார்.”
“என் சேவை மையம் இன்னும் புதுப்பித்தலில் உள்ளது, அடுத்த மாதத் தொடக்கத்தில்தான் நான் என் புதிய சேவை மையத்திற்குச் செல்ல உள்ளேன்,” என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
தற்போது, தாமான் டத்தோ சேனு, செந்தூல், பிகேஆர் அலுவலகத்தில், அவரது சேவை மையம் தற்காலிகமாக இயங்கி வருவதாகவும் அவர் விளக்கினார்.
மிக இளைய எம்பி
கடந்த 14-வது பொதுத் தேர்தலில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிஎன், பாஸ் மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளரைத் தோற்கடித்து, மிக இளைய நாடாளுமன்ற உறுப்பினராக, நாட்டின் வரலாற்றில் பிரபாகரன் பெயர் பதித்தார்.
சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த பிரபாகரன், தியான் சுவாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதன் காரணமாக, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டார்.
ஒரு தனியார் கல்வி மையத்தில், சட்டத்துறை மாணவரான பிரபாகரன், பொதுத் தேர்தலில் வென்றிருந்தாலும், வளங்கள் மிகவும் குறைவாகவே இருப்பதால், தனது சேவை மையத்தை ஒருங்கிணைப்பதற்கு அவரின் தந்தையின் உதவியை நாடியுள்ளார்.
“பக்காத்தான் ஹராப்பானின் ஆதரவோடு என்றாலும், பொதுத் தேர்தலில் நான் ஒரு சுயேட்சை வேட்பாளராகதான் வென்றேன். ஆக, என்னிடம் வளங்கள் மிகவும் குறைவு.
“பெரும்பாலான நேரங்களில், அவர் (தந்தை) சேவை மையத்தில்தான் இருப்பார், சமூகநலன், வீட்டுப் பிரச்சினைகள் என பல வழக்குகளுக்கு அவர் எனக்கு உதவியுள்ளார். என் தந்தை மட்டுமின்றி, என் அலுவலகத்தில் உள்ள மற்ற ஊழியர்களும் பத்து தொகுதி குடியிருப்பாளர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றார்கள்,” என்று அவர் கூறினார்.
அப்பாவுடன் அடிக்கடி கலந்துபேசுவேன்
தன் தந்தை அடிக்கடி அவரிடம் கலந்துபேசுவதாகவும் வாக்காளர்களிடம் இருந்து அழைப்புகளைப் பெறுவதாவும் பிரபாகரன் கூறினார்.
“என் தந்தை, என் அலுவலகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார் எனும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அவர் எப்பொழுதும் என்னிடம் கலந்துபேசுகிறார், எனக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து, வாக்காளர்களிடமிருந்து அடிக்கடி அழைப்புகள் வந்து கொண்டிருக்கும்.
“எனது பணிகளை சுலபமாக்க, மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் நான் கலந்துபேசுகிறேன்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், பத்து நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த சிலர், அத்தொகுதி மக்கள் பிரச்சினைகளில் பிரபாகரனின் தந்தை தலையிடுவதாகக் குற்றஞ்சாட்டி, அவருக்கு எதிராக ஒரு புகாரைப் பதிவு செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, எம்பி-ஐ சந்திக்க பொது மக்களை அவர் தந்தை அனுமதிப்பதில்லை என்றும் அப்புகாரில் கூறப்பட்டிருந்தது.