வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்துறை அமைச்சர் சலாஹுடின் அயுப், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்காத “சோம்பேறி” நாடாளுமன்ற உறுப்பினர்களின் எலவன்ஸ்-ஐ வெட்ட வேண்டும் எனும் முன்னாள் அமைச்சர் ராய்ஸ் யாத்திம்மின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, அவர்களின் பெயர்களையும் வெளியிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், இந்நடவடிக்கை எந்தவொரு சரியான காரணமும் இல்லாமல், நாடாளுமன்றத்தில் இல்லாத உறுப்பினர்கள் மீது மட்டும் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“ஆமாம், நான் ஒப்புக்கொள்கிறேன் (ராய்ஸின் ஆலோசனையை),” என அவர் கூறினார்.
இன்று, மதிய உணவிற்குப் பின்னர், போதிய எண்ணிக்கை (கோரம்) இல்லாததால், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் 5 நிமிடங்கள் தாமதமாகத் தொடரப்பட்டது குறித்து, ராய்ஸ் தனது டுவிட்டரில் பதிவிட்ட செய்திக்கு சலாஹுடின் இவ்வாறு பதிலுரைத்தார்.
“நாடாளுமன்ற உருப்பினர்கள் பொறுப்பற்றவர்களாக இருந்தால், வேண்டுமென்றே அல்லது சரியான காரணமின்றி வருகையளிக்காமல் இருந்தால், தனது சுயநலத்திற்காக அப்பதவியை பயன்படுத்தினால், மக்கள் பிரச்சனைகளை விவாதிக்காமல் இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று நான் கருதுகிறேன்.
“எலவன்ஸில் வெட்டலாம் என்பது, நாடாளுமன்ற விதிகளுக்குட்பட்டு இருந்தால்,” என்றார் அவர்.
இன்று, வேறொரு விளக்கக் கூட்டத்தில் கலந்துகொண்டதன் காரணமாகவே, சில எம்பி-க்கள் தாமதமாக மாநாட்டிற்கு வந்தனர் என்றும் சலாஹுடின் தெரிவித்தார்.
“அவர்கள் மற்ற இடங்களுக்குச் சென்றிருந்தால், அது ஒரு பிரச்சினையாக இருக்கலாம், ஆனால், அவர்கள் நாடாளுமன்றத்தில், வேறு ஒரு விளக்கக் கூட்டத்தில் இருந்தனர். நானும் நாடாளுமன்றத்தில் ஒரு சாதாரண அங்கத்துவ உறுப்பினராக இருந்திருக்கிறேன், நாடாளுமன்றத்தில் நிறைய விளக்கக் கூட்டங்கள் நடைபெறும்,” என்று கூறிய அவர், இந்தச் சம்பவத்தை வைத்து, பக்காத்தான் ஹராப்பான் எம்பி-க்களை மதிப்பிட வேண்டாம் என்றும் பொது மக்களை வலியுறுத்தினார்.