எண்ணெய் உற்பத்தி மாநிலங்களுக்கு மொத்த உற்பத்தியின் அடிப்படையில் 20 விழுக்காடு உரிமத் தொகை கொடுத்தால் பெட்ரோனாஸ் கடுமையாக பாதிக்கப்படும் என்கிறார் பொருளாதார விவகார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலி.
“எண்ணெய் உற்பத்தி மாநிலங்களுக்கு உரிமத் தொகையை உற்பத்தியில் 20 விழுக்காடு என்று உயர்த்தத் தொடங்கினால் பெட்ரோனாசின் நிதிநிலையும் மத்திய அரசாங்கத்தின் நிதி நிலையும் பாதிப்புறும்”, என மட்யுஸ் தங்கா(உப்கோ- துவாரான்)வுக்கு அளித்த பதிலில் அஸ்மின் குறிப்பிட்டார்.
மட்யுஸ், எண்ணெய் உற்பத்தி மாநிலங்களுக்கான எண்ணெய் உரிமத் தொகை குறித்து விளக்குமாறு அமைச்சரைக் கேட்டிருந்தார்.
அதே விவகாரம் குறித்து பேசிய முஸ்தபா முகம்மட்(பிஎன் – ஜெலி) எண்ணெய் உற்பத்தி மாநிலங்களுக்கு 20 விழுக்காடு உரிமத் தொகை வாக்குறுதி அளிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி அவை அதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
அதற்கு மறுமொழி அளித்த அஸ்மின், பக்கத்தான் 20 விழுக்காடு உரிமத் தொகை என்று அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது ஆதாயத்தில் 20 விழுக்காட்டை.
“செலவையெல்லாம் ஆராய்ந்துதான் அதை(ஆதாயத்தில் 20 விழுக்காட்டை)க் கொடுக்க முடிவு செய்தோம்” , என்றாரவர்.
எனினும் அதன் தொடர்பில் எண்ணெய் உற்பத்தி மாநிலங்களுடன் பேசப் போவதாக அவர் சொன்னார்.
“ஆதாயத்தில் 20 விழுக்காடா, மொத்த உற்பத்தியில் 20 விழுக்காடா என்பதைச் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் கலந்துபேசி முடிவு செய்வோம்”, என்றார்.
இதனிடையே அஸ்மின் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரை எதிர்கொண்ட ஆயர் ஈத்தாம் எம்பி வீ கா சியோங், அஸ்மினின் மக்களவை பதிலைச் சாடினார்.
எண்ணெய் உரிமத் தொகை என்றால் உற்பத்தியில் 20 விழுக்காடு என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்று வீ கூறினார்.
“வாக்குறுதி அளித்த பிறகு இப்போது நிறைவேற்றுவது சிரமமாக இருப்பதால் அதற்கான விளக்கத்தை மாற்றப் பார்க்காதீர்கள்.
“ (முடியாது என்பதை) ஒப்புக்கொள்ளுங்கள் வெளிப்படையாக சொல்லுங்கள்”, என்றாரவர்.