ஷரியா நீதிமன்றங்களின் ‘குழந்தை திருமணம்’ தொடர்புடைய விதிகளை இறுக்குவதற்கு, அதன் தர இயக்க நிர்ணயங்களை (எஸ்.ஓ.பி.) அரசாங்கம் வடிவமைத்து வருகிறது என்று பிரதமர் துறை அமைச்சர் முஜாஹிட் ராவா யூசோப் தெரிவித்தார்.
ஒரு ‘குறுகிய கால நடவடிக்கை’யாக, குழந்தைகள் திருமணத்தின் மீதான நேரடித் தடைக்கு அரசாங்கம் இணங்குகிறது என்றும் மத விவகாரங்கள் தொடர்புடைய அமைச்சருமான அவர் கூறினார்.
“சட்டத்தில் ஒரு நடைமுறை (குழந்தை திருமணம்) இருக்கும் வரை, நீங்கள் அதை மதிக்கத்தான் வேண்டும், எனவே அந்த நடைமுறையை இறுக்க ஒரு எஸ்.ஓ.பி.-யை நாம் உருவாக்குவோம்.
“இது ஒரு தற்காலிக நடவடிக்கைதான், நீண்ட கால நடவடிக்கை மிகவும் முக்கியமானது. குழந்தைகள் திருமணத்தை உறுதியாக தடை செய்ய வேண்டும்,” என்று இன்று காலை, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
இம்மாத இறுதியில், முதல் ஆய்வுக்காக அந்த எஸ்.ஓ.பி. தன்னிடம் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக முஜாஹிட் தெரிவித்தார்.
முன்னதாக, கிளாந்தான், குவா மூசாங்கில், 41 வயதான ஒருவர் 11 வயது சிறுமி ஒருத்தியை திருமணம் செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடைய வைத்தது.
தற்போது, 16 வயதிற்குக் குறைவான பெண்களும் 18 வயதிற்குக் குறைவான ஆண்களும் ஷரியா நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றிருந்தால் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
இஸ்லாம் அல்லாதவர்கள், அவர்கள் சார்ந்த மாநிலத்தின் மந்திரி பெசார் அல்லது முதல் அமைச்சரிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.