தேங்கிக் கிடக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் 3,000 அடையாள ஆவண விண்ணப்பக் கோப்புகளில் இன்றைய உள்துறை அமைச்சர் கையொப்பமிடுவார், சேவியர்  

மலேசிய இந்தியர்கள் அதிகம் எதிர்பார்த்தும், கடந்த தேர்தலின் போது நாறு நாட்களில் இந்தியர்களின் அடையாளப் பத்திர விவகாரத்திற்குத் தீர்வு காணப் பக்த்தான்  ஹராப்பான்  வழங்கிய வாக்குறுதிகளுக்கு  ஏற்பவும்,  கடந்த சில பக்கத்தான்  அமைச்சரவை கூட்டங்களில்  இதன் மீது கவனம் செலுத்தப்பட்டது.

அதன் விளைவாக இரண்டு வெற்றிகளை நாம்  அடைந்துள்ளோம் என்கிறார் சேவியர் ஜெயக்குமார்.

ஒன்று, தேசியப் பதிவு இலாகாவால் ஏற்கனவே பரிசீலிக்கப்பட்டு முன்னாள் துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சரும் இன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான  ஸாகிட் ஹமிடியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அவர் மேஜையில் தேங்கிக் கிடக்கும் 3,000 கோப்புகளிலும், இன்றைய உள்துறை அமைச்சர் எந்தத் தடையுமின்றிக் கையெழுத்திட்டுப் குடியுரிமை வழங்குவது.

இரண்டு,  அடையாளப் பத்திரங்களைப் பெற நடப்பிலுள்ள விதிமுறைகளை எளிமைப்படுத்துவதாகும். அதன்  அடிப்படையில்,  நேற்று, புதன்கிழமை, இன்றைய அமைச்சரவை இந்நாட்டில் பிறந்த 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் குடியுரிமை வழங்க முடிவு செய்துள்ளது.

இந்தப் பிரிவுக்குட்பட்ட, இங்குப் பிறந்து, 60 வயதுக்கு மேற்பட்ட  அனைத்து மலேசிய இந்தியர்களும் தங்கள் குடியுரிமைக்கான விண்ணப்பங்களை உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்று சேவியர் கூறினார். ஏற்கனவே விண்ணப்பித்து விட்டுக் காத்திருப்போர் அது குறித்த நகலை, அவர்களின் நாடாளுமன்ற, சட்டமன்றப் பிரதிநிதிகளின் வழி  அமைச்சரவை கவனத்துக்கும் கொண்டுவரும்படி கேட்டுக்கொண்டார் நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

அதன்வழி, விண்ணப்பங்கள் தேவையற்ற ரீதியில் கிடப்பில் போடுவதைத் தவிர்க்க முடியும் என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.