நீதித் துறையில் புது சகாப்தம்!

கி. சீலதாஸ், ஜூலை 26, 2018.

சிங்கப்பூர்,  புரூணை, வட  போர்னியோ (இப்பொழுது  ‘சாபா’),  சரவாக்  ஆகிய  பிரதேசங்கள்  மலாயா  கூட்டரசோடு  இணைந்து  மலேசியா  அமைவது  வட்டாரப்  பாதுகாப்புக்கு  உதவும்  என்பதை  அன்றைய  மலாயாவின்  பிரதமர்  துங்கு  அப்துல் ரஹ்மான்  அறிவித்தார்.  மலேசியா  அமைவதை  ஆதரித்தவர்களும்  உண்டு,  ஆதரித்தவர்கள்  பின்னர்  மனம்  மாறி  அதை  எதிர்த்தவர்களும்  உண்டு.   உள்நாட்டில்  மட்டுமல்ல  வெளிநாடுகளிலும்    மாறுபட்ட  கருத்துகள்  எழத்தொடங்கின.

சாபாவும்,  சரவாக்கும்  பின்தங்கிய  பிரதேசங்கள் –  அங்கு  வாழும்  மக்களுக்கு  போதுமான  அரசியல்  அனுபவம்  கிடையாது.  எனவே,  அந்த  மாநில  மக்கள்  மீது  நல்லெண்ணம்  கொண்டதாகச்  சொல்லிக்  கொண்ட  பிரிட்டன்  அங்கு  வாழும்  மக்களின்  மலேசிய  அமைப்பைக்  குறித்த  அபிப்பிராயத்தை  அறிந்து  கொள்ள  முற்படவில்லை.  துங்கு  அப்துல்  ரஹ்மானின்    மலேசியாவைக்  குறித்த  சாதகமான,  மனநிலை  மாறுவதற்குள்  மலேசியா  திட்டத்தை  நிறைவேற்றுவதில்தான்   பிரிட்டன்  தன்  கவனத்தைச்  செலுத்தியது.  இரண்டாம்  உலகப்போருக்குப்  பின்  பிரிட்டனின்  பொருளாதாரம்  பாதிப்புற்று  இருந்ததால்  வெளிநாடுகளில்  தமது  இராணுவ  பொறுப்பை  குறைத்துக்  கொள்வதில் அது தீவிரமாக  இருந்தது.

அந்தக்  காலக்கட்டத்தில்  மலேசியாவுக்குச்  சாதகமானப் பிரச்சாரம்  முடுக்கிவிடப்பட்டது.  சிங்கப்பூரின்  பிரதமர்  லீ  குவான்  யூ  தமது  பிரச்சாரத்தில்  கம்யூனிஸ்டுகளின்  செல்வாக்கு  பரவுவதைத்  தடுப்பதற்கு  மலேசிய  அமைப்பு  தேவை  என்று  வலியுறுத்தினார்.  இந்த  மலேசிய  அமைப்பு  நிறைவேறாவிட்டால்  இந்த  வட்டாரமே  கம்யூனிஸ்டுகளின்  கையில்  விழுந்துவிடும்  என்பது  அவரின்  திட்டவட்டமானக்  கருத்து.

சாபா, சரவாக் மக்களோ  தடுமாற்ற  நிலையில்  இருந்தார்கள்  என்றுதான்  சொல்லவேண்டும்.  காரணம்,  அங்கு  அரசியல்  இயக்கங்கள்  ஏதும்  கிடையாது.  மக்களுக்கு  அரசியல்  உணர்வை  ஏற்படுத்தும்  தகுதியுடைய  தலைவர்கள்  இல்லை.  அத்தகையத்  தலைவர்கள்  அல்லது  தலைமைத்துவம்  வளர்வதை  பிரிட்டன்  ஆதரித்தது  கிடையாது.  இப்படிப்பட்டச்  சூழ்நிலையில்  மலேசிய  அமைப்பு  சாபா,  சரவாக்  மக்களுக்கு  நன்மை  பயக்குமா  என்பதைத்  தெளிவுடன்  விளக்க  யாரும்  முன்  வரவில்லை.  அதுமட்டுமல்ல,  சாபா,  சரவாக்  மக்களை  தங்கள்  பக்கம்  எவ்வாறு  ஈர்ப்பதில்தான்  எல்லோரும்  கவனமாக  இருந்தனர்  மலாயாவின்  தலைவர்கள்,  குறிப்பாக  துங்கு அப்துல் ரஹ்மான்,  அப்போது  நடந்த  மலேசியாவுக்கு  ஆதரவானப்  பிரச்சாரக்  கூட்டத்தில்  சொன்னதப்  பெரும்பாலும்  மறந்துவிட்டிருக்கலாம்.  ஆனால்,  அந்தப்  பிரச்சாரம்  சாபா,  சரவாக்  மக்களை  மலேசிய  அமைப்பின்  மீது  நம்பிக்கை  வலுவடையச் செய்தது  எனலாம்.

துங்கு  அப்துல்  ரஹ்மான்  மலேசியாவைப்  பற்றி குறிப்பிடும்போது,  அது  மதச்சார்ப்பற்ற  நாடு, அதில் திறமையானவர்களுக்கு   இன  மத  வேறுபாடின்றி   வாழ்வில்  முன்னேற  வழியுண்டு.  ஒரு  சாபா  அல்லது  ஒரு  சரவாக்  குடிமகன்   மலேசியாவின்  பிரதமராக  முடியும்  என்று  சொன்னார்..  ஒரு  பொருளை  விற்கும்  வியாபாரி  தன்  பொருளைப்  பற்றி  புகழ்வதும்;  அதன்  நன்மையைப்  பற்றி  மிகைப்படுத்துவதும்   சர்வசாதாரணம்   அது  போலத்தான்  துங்கு  அப்துல்  ரஹ்மானின்   பேச்சும்,  உறுதிமொழியும்   அமைந்திருந்தன.    16.9.1963-இல்  மலேசியா   அமைந்தது.  மலேசியாவின்  மத்திய  அரசு  எப்படி  நடந்துகொண்டது  என்பது  வரலாறாகும்.  பிற்காலத்தில்   சாபாவும்  சரவாக்கும்  மலாயாவின்  கொள்கைகளில்  அவ்வளவு  நம்பிக்கை  வைத்திருக்கவில்லை.  சில  வட்டாரங்களில்  பிரிவினை  பேச்சும்  அடிபட  ஆரம்பித்தது.

சாபா,  சரவாக்  மக்கள்  தங்களின்  உரிமைகளை  இழந்துவிட்டதாகக்  கூறப்பட்டது.  முன்னாள்  பிரதமர்  டத்தோஸ்ரீ  நஜீப்  ரசாக்  பதினாங்காம்  தேர்தலுக்கு  முன்பு,  “சரவாக்  இழந்த  உரிமைகளைத்  திருப்பித்  தருவோம்”  என்று  கூறினார்.  அந்த  ஒப்புதல்  ஒன்றே  போதும்  சாபா,  சரவாக்  ஆகிய  மாநிலங்களின்  பரிதாப  நிலையை  விவரிக்க.

நஜீப்  பிரதமராக  இருந்த  காலத்தில்  மலேசியாவின்  தலைமை  நீதிபதியும்,  மேல்முறையீட்டு  நீதிமன்றத்  தலைவரும்  ஓய்வு  பெறும்  காலம்  நெருங்கியது.  அவர்களின்  பதவி  காலத்தை  இரண்டு  ஆண்டுகளுக்கு  நீட்டித்தார்  நஜீப்.   இதன்  விளைவு  அவ்விருவரும்  வகித்தப்  பதவிகளுக்குத்  தகுதியுடையவர்கள்   பலர்   இருந்த  போதிலும்  அவர்களின்  உயர்வை  முடக்கும்  தரத்தைக்  கொண்டிருந்தது.  அவர்களின்  பதவி  நீட்டிப்பு  அரசமைப்புச்  சட்டத்திற்குப்  புறம்பானது  என்று  சொல்லப்பட்டது.  நீதிமன்ற  வழக்கும்  ஆரம்பிக்கப்பட்டது.

பதினாங்காம்  பொதுத்தேர்தலில்  புது  அரசான  நம்பிக்கை  கூட்டணியை  ஆட்சியில்  அமர்த்தி  மகிழ்ந்தனர்  மலேசியர்கள் – புத்துணர்ச்சி  எங்கும்  காணப்பட்டது.

மலேசிய  தலைமை  நீதிபதியும்,  மேல்முறையீட்டு  தலைவரும்  பணித்துறவு  சமர்ப்பித்தனர்.  மலேசியாவுக்கான  தலைமை  நீதிபதிகளைத்  தேடும்  படலம்  ஆரம்பித்தது.  அதற்குத்  தகுதியானவர்  சாபா,  சரவாக்  மாநிலங்களின்  தலைமை  நீதிபதி  டான்ஸ்ரீ  ரிச்சர்ட்  மலான்ஜூம்   என்று  பரவலாகப்  பேசப்பட்டது.

இப்பொழுது  சாபாவைச்  சேர்ந்த  ரிச்சர்ட்  மலான்ஞ்சும்தான்  மலேசியாவின்  தலைமை  நீதிபதிக்கான  பொறுப்பை  ஏற்றுள்ளார்.  துன்  டாக்டர்  மகாதீர்  பிரதமராக   திரும்பிய   காலத்தில்  அவராலேயே  சிபாரிசு  செய்யப்பட்டவர்  இன்று  மலேசியாவின்  தலைமை  நீதிபதி.  இது  ஒரு  நல்ல  மாற்றம்.  நம்பிக்கைக்கு   மனநிறைவு  அளிக்கும்  மாற்றம்.

மலேசியா  அமைந்தபோது,  குறுகிய  காலத்திற்கு –  துன்  தாம்ஸன் –  இவர்  பிரிட்டனைச்  சேர்ந்தவர், தலைமை நீதிபதியாக இருந்தார்.  அவருக்குப்  பிறகு,  சுமார்  ஐம்பத்து  மூன்று   ஆண்டுகளுக்குப்  பிறகு  சாபாவின்  மகன்  ரிச்சர்ட்  மலான்ஜூம்  மலேசியாவின்  தலைமை  நீதிபதியானார்.     நல்ல  பண்பாளர்.  நீதிக்கும்  நேர்மைக்கும்   மதிப்பளிப்பவர்  என்று  அனைவராலும்  போற்றப்படுபவர்.  இந்த  மகிழ்வான  நிகழ்வை  பாராட்டாமல்  இருக்க  முடியாது.  சட்ட  ஆளுமைமிக்க  சிலர்  இன,  சமய  உணர்வோடு  ரிச்சர்ட்  மலான்ஜும்  மலேசிய  தலைமை  நீதிபதியாக  நியமிக்கப்பட்டதில்  குற்றம்  காண்கின்றனர்.  இந்தப்  போக்கு  அவர்களின்  குறுகிய  மனநிலையை   வெளிப்படுத்துகிறது  எனலாம்.  இன்றளவும்  அவர்கள்  முதிர்ச்சிப்  பெறவில்லை  என்பது  வேதனையாக  இருக்கிறது.

சுமார்  மூன்று  மாதங்களுக்கு  முன்பு  ரிச்சர்ட்  மலான்ஜுமை  ஒரு  நிகழ்ச்சியில்  சந்தித்தபோது  அவர்  மலேசியாவின்  தலைமை  நீதிபதியாக  நியமிக்கப்படுவார்  என்று  நான்  எதிர்பார்க்கவில்லை.