பிரசாரனா மலேசியா பெர்ஹாட் என்ற போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாகார் விலகிக் கொண்டுள்ளார்.
தமது இராஜினாமா கடிதத்தை ஜூலை 17இல் தாக்கல் செய்ததாக காலிட் சின் சியு டெய்லியிடம் கூறினார். இப்போது வேலையற்றவராக இருப்பதாகவும் அவர் கூறிக்கொண்டார்.
போலீஸ் படைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அடுத்த நாள், கடந்த ஆண்டு செப்டெம்பர் 5, அவரை பிரசாரனா வாரியத்தின் தலைவராக நஜிப் நிருவாகம் நியமித்தது.
அரசாங்க அமைப்புகள் மற்றும் அரசுத் தொடர்புள்ள நிறுவனங்களின் (ஜிஎல்சி) அதிகாரிகள் பதவியிலிருந்து விலகிக் கொள்ளும் அல்லது நீக்கப்படும் நீண்ட பட்டியலில் மிக அண்மையில் இடம் பெறுகிறவர் காலிட் ஆவார்.
இது போன்ற அமைப்புகளின் அதிகாரிகள் பெறும் கொழுத்த சம்பளம் மற்றும் போனஸ் போன்றவற்றை தாம் தீவிரமாக கண்காணித்து வருவதாக பிரதமர் மகாதிர் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.