மசீச : மஸ்லியின் அறிக்கை ஏன் சீன மொழியில் மட்டும்?

கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக்கின் “ஊடக அறிக்கை” ஏன் சீன மொழியில் மட்டும் வெளியிடப்பட்டது? தேசிய மொழி ஊக்குவிக்கப்பட வேண்டியது இல்லையா? என்று மலேசிய சீனர் சங்கத் (மசீச) துணைத் தலைவர் வீ கா சியோங் கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஊடகவியலாளர்களின் கருத்துப்படி, ‘சீன தனியார் பள்ளிகளுக்கான அரசாங்க ஒதுக்கீடு’ பற்றிய எனது வாய்மொழி கேள்விக்கு, கல்வி அமைச்சர் சீன மொழியில் மட்டும் எழுத்துப்பூர்வமான பதிலைக் கொடுத்துள்ளார். இது ஆச்சரியமாக இருக்கிறது!” என்று ஆயேர் ஈத்தாம் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், தனது முகநூல் பதிவின் வழி தெரிவித்துள்ளார்.

ஓர் அமைச்சரான மஸ்லீ, நாடாளுமன்ற விவகாரங்களைப் பொறுத்தவரையில், சீன மொழி ஊடக அறிக்கையை மட்டும் வெளியிடக்கூடாது. ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்? இது ஒரு முக்கியமான விஷயம், நாடாளுமன்றத்தில் உள்ள அசல் பதிலைப் பற்றிய ஒரு விளக்கமான அது முரண்பாடான அர்த்தத்தை கொண்டுள்ளது என்றும் வீ கூறியுள்ளார்.

‘பஹாசா மலேசியா’ அதிகாரப்பூர்வமான மொழி

இது போன்ற நடவடிக்கை, தேசிய மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும் எனும் கொள்கையோடு இணங்கவில்லை. அதுமட்டுமின்றி, அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான மொழியான மலாய் மொழியை அவர் மதிக்கவில்லை என்றும் கருதப்படுகிறது என்று வீ குறிப்பிட்டுள்ளார்.

சீன தனியார் பள்ளிகள், சீன மாணவர்களுக்கு மட்டுமல்ல, என்பதை மஸ்லி புரிந்துகொள்ள வேண்டும். இது அவர் ஒரு குறுகிய சிந்தனை இனவாதி என்பதைக் காட்டுகிறது.

அதுமட்டுமின்றி, கல்வி அமைச்சர் என்ற வகையில், அவர் அனைவரிடமும் இன பாகுபாடின்றி, வெளிப்படையான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். மேலும், கல்வி சிக்கல்களைக் கையாள்வதில் பாரபட்சமாக செயல்படக்கூடாது.

பல்லின மக்களுக்கும் தெளிவூட்ட வேண்டும்

பல்லின மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் அவர் தேசிய மொழியில் தனது அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும்.

சீனர்களிடம் ‘இனிப்பான’ செய்தியைக் கூறிவிட்டு, சீனரல்லாதவரிடம் வேறு ஒன்றை அவர் கூறக்கூடாது என்றும் வீ கூறியுள்ளார்.

சீனக் கல்வி உட்பட, நாட்டில் பல மொழி கல்வி முறையின் தரத்தை மேம்படுத்துவதில் அவர் நேர்மையானவராக இருந்தால், அனைத்து மலேசியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கல்வி அமைச்சராக அவர் பொறுப்பேற்க வேண்டும், வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயல்பட வேண்டும் என்றும் வீ கா சியோங் தனது முகநூல் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.