ஹன்னா: திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதை உயர்த்துவது அவசியம்

துணை   அமைச்சர்  ஹன்னா   இயோ  அரசாங்கம்    குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக  உயர்த்துவது    அவசியம்   என்றார்.  பக்கத்தான்    ஹரப்பான்    அதன்     தேர்தல்     அறிக்கையில்    சிறார்   திருமணப்   பிரச்னைக்குத்   தீர்வு   காணப்படும்    என்று    உறுதி    அளித்திருப்பதை    அவர்   சுட்டிக்காட்டினார்.

“அதற்கு  நாம்   சாக்குப்போக்கு   சொல்லிக்கொண்டிருக்க   முடியாது.  வேறு   வழியில்லை,   தேர்தல்  கொள்கை    அறிக்கையில்   செய்வதாக  சொல்லியிருக்கிறோம்.  அதைச்   செய்தாக   வேண்டும்”,  என  மலாய்  மெயிலிடம்  மகளிர்,  குடும்ப,   சமூக  மேம்பாட்டுத்துறை   துணை   அமைச்சர்   கூறினார்.

பொதுத்   தேர்தலுக்குமுன்   ஹரப்பான்   நாட்டில்   பெண்களின்   நிலையை  உயர்த்த    5  வாக்குறுதிகளை   அளித்திருந்தது.  அவற்றில்   ஒன்று  “பெண்களின்  உரிமைகளையும்   கண்ணியத்தையும்   சட்டப்பூர்வமாக    பாதுகாத்தல்”.  அதன்  பொருட்டு   18வயதைக்  குறைந்தபட்ச  திருமண  வயதாக  நிர்ணயிக்கும்   சட்டம்   கொண்டுவரப்படும்    என்று   அது   கூறியிருந்தது.

கடந்த    பத்தாண்டுகளில்     நாட்டில்     நடந்துள்ள   சிறார்  திருமண   எண்ணிக்கையைக்  கண்டு   அதிர்ச்சி   அடைவதாக   செகாம்புட்  எம்பியான   ஹன்னா   கூறினார்.

2007க்கும்  2017க்குமிடையில்   முஸ்லிம்களுக்கிடையில்  10,807  சிறார்  திருமணங்கள்   நடந்துள்ளன. சரவாக்,  கிளந்தான்,  சாபா   ஆகிய   மாநிலங்களில்   அவை   அதிகம்  நடந்துள்ளன.

அதே  காலக் கட்டத்தில்  முஸ்லிம்- அல்லாதாரிடையே  4,999  சிறார்   திருமணங்கள்   நடந்துள்ளன.  சர்வாக்,  ஜோகூர்  ,  பேராக்   மாநிலங்களில்   அவை   அதிகம்   நிகழ்ந்துள்ளன.