காசானா, பெட்ரோனாஸ், பி.என்.பி ஆகியவற்றைப் பிரதமர் கண்காணிப்பார்

கசானா நேஷனல், பெட்ரோனாஸ் மற்றும் பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் (பிஎன்பி) ஆகிய அரசு சார்பு நிறுவனங்களை (ஜிஎல்சி) பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மிக நெருக்கமாக கண்காணித்து வருகிறார்.

ஆயினும், முன்னர் நிதி அமைச்சின் கீழ் இருந்த இந்த ஜிஎல்சி நிறுவனங்களில் மகாதீரின் மேற்பார்வை எந்த அளவுக்கு இருக்கும் என்பது தெளிவாக இல்லை.

மலேசியாகினி பார்வையிட்ட பட்டியலின் அடிப்படையில், இந்த ஜி.எல்.சி. நிறுவனங்கள் பிரதமர் துறையின் கீழ் வைக்கப்படும், இதன்வழி பிரதமர் துறை அமைச்சர்கள் அந்நிறுவனங்களைக் கண்காணிக்க முடியும்.

ஜி.எல்.சி. மற்றும் அரசு ஏஜென்சிகள் மீதான மறுசீரமைப்புகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று மலேசியாகினிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்பட்டது போல், காசானா, பெட்ரோனாஸ் மற்றும் பி.என்.பி ஆகியவைப் பொருளாதார விவகார அமைச்சரான அஸ்மின் அலி அமைச்சின் மேற்பார்வையில் வைக்கப்படாது என்று தெரிகிறது.

ஆயினும், பிரதமர் துறையின், பொருளாதார திட்டமிடல் பிரிவு மற்றும் ஃபெல்டா ஆகியவற்றின் கீழ் இயங்கிவந்த இந்த நிறுவனங்களை மேற்பார்வையிட அஸ்மின் தயாராக இருக்கிறார்.

பூமிபுத்ராக்களை வளப்படுத்தும் தன் நோக்கத்திலிருந்து காசானா விலகிவிட்டது என்று இம்மாதத் தொடக்கத்தில் மகாதீர் கூறியிருந்தார்.

பெட்ரோனாஸ் ஆலோசகராக இருந்த மகாதீர், 2016-ஆம் ஆண்டில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கையில், பிரதமர் மற்ற அமைச்சுகளில், குறிப்பாக நிதி அமைச்சில் பொறுப்பு வகிக்கமாட்டார் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நஜிப் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் இருந்த காலகட்டத்தில் நடந்த ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் போன்று நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய இந்தத் தேர்தல் வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

மசீச துணைத் தலைவர் வீ கா சியோங் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு (எம்.ஓ.எஃப். இன்க்) இப்போது நிதி அமைச்சைவிட சக்திவாய்ந்ததாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இருப்பினும், அஸ்மின் அலியும் நிதியமைச்சர் லிம் குவான் எங்-கும் அக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

இதற்கிடையில், எம்.ஓ.எஃப். இன்க்-ஐ கலைக்க ஒரு திட்டம் இருப்பதாக ‘தி ஸ்டார்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அவ்வாறு நடந்தால், அது மோசமான தாக்கங்களை ஏற்படுத்தலாம், ஏனெனில் எம்.ஓ.எஃப்.  இன்க், பல நிறுவனங்களில் ஒரு பெரிய பங்குதாரர் விளங்குகிறது.