பாதுகாப்புக் குற்றச் சட்டம் (சோஸ்மா), 1959 குற்றத்தடுப்புச் சட்டம்(பொக்கா) பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 2015 (பொடா) போன்ற தடுப்புச் சட்டங்களை அகற்ற எண்ணும் அரசாங்கம் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்(ஐஎஸ்ஏ) அகற்றப்பட்டதும் நாட்டில் நடந்ததைச் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும் என்று முன்னாள் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் மூசா ஹசான் கூறினார்.
“ஐஎஸ்ஏ, அவசரகாலச் சட்டம் ஆகியவற்றை எடுத்தாயிற்று. அவை இரத்தான பின்னர் கடுங் குற்றங்கள், குறிப்பாக இரகசிய கும்பல்கள் இடங்களுக்காக அடித்துக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்தன.
“அச்சட்டங்களை அகற்றுவதற்குமுன் விரிவாக ஆராய வேண்டும்………சோஸ்மா, பொக்கா, பொடா இல்லையென்றால் ஐஎஸ், அல்லது நன்கு அமையப்பெற்ற ஆயுதமேந்திய கும்பல்களின் பயங்கரவாதச் செயல்களை ஒடுக்க முடியாமல் போய்விடும்”, என்றவர் பெர்னாமா நேர்காணல் ஒன்றில் கூறினார்.
ஜூலை 22-இல், பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அரசாங்கம் மக்களை அடக்கி ஒடுக்கும் சட்டங்கள், குறிப்பாக சோஸ்மா இரத்துச் செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
முன்னாள் போலீஸ் படைத்தலைவரைப் பொறுத்தவரை, தீய சக்திகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்க கடுமையான தடுப்புச் சட்டங்கள் தேவைதான் என்று நினைக்கிறார்.