குலா : ‘மெலாயு பெண்டாத்தாங்’ என்று நான் சொன்னதாக உத்துசான் அவதூறு

‘மலாய்க்காரர்கள் குடியேறிகள்’ (மெலாயு பெண்டாத்தாங்) என்று அறிக்கை ஒன்றில் தான் குறிப்பிட்டுள்ளதாக, இன்று உத்துசான் மலேசியா நாளேடு செய்தி வெளியிட்டுள்ளதை, மனித வளத்துறை அமைச்சர் எம் குலசேகரன் மறுத்தார்.

டிஏபி துணைத் தலைவருமான அவர், அத்தகைய அறிக்கையை வெளியிடவோ அல்லது மலாய்க்காரர்களை அவ்வாறு குறிப்பிடவோ இல்லை என்று கூறியுள்ளார்.

கடந்த வாரம், நீலாய், நெகிரி செம்பிலானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், ‘குலசேகரன் மெலாயு பங்சா பெண்டாத்தாங் என்று கூறினார்’ என்ற தலைப்பில் இன்று, உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

“இது ஓர் அவதூறு மற்றும் பொய்யாகும். நான் ஒருபோதும் அப்படி சொல்லவில்லை, அது உண்மையான பின்னணியை அல்லது சூழலைச் சிதைத்துவிட்டது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நீலாயில் நடந்த ஓர் இந்து மத நிகழ்ச்சியில், இந்தியர்கள் உட்பட யாரையும் ‘பெண்டாத்தாங்’ (குடியேறிகள்) என்று அழைக்கக்கூடாது என தான் பேசியதாக அவர் சொன்னார்.

“அந்த நிகழ்ச்சியில், இந்தியர்கள் 2,500 ஆண்டுகளாக மலாய் மண்ணில் இருக்கிறார்கள். இந்தியர்களால் கொண்டுவரப்பட்ட இந்து மதம், உள்ளூர் மக்களின் ஆரம்பக் கால மதமாக (அப்போது) இருந்தது என்றுதான் நான் விளக்கினேன்.

“பூஜாங் பள்ளத்தாக்குப் பகுதியிலுள்ள தொல்பொருள் கண்டுபிடிப்புகள், இதை நிரூபணம் செய்துள்ளன, எனவே இந்த வரலாற்று காரணியை அடிப்படையாகக் கொண்ட இந்தியர்கள் புலம்பெயர்ந்தோர் என அழைக்கப்படுவது நியாயமில்லை.

“தமிழ் மொழியில் நடந்த அந்நிகழ்ச்சியில், மலாய்க்காரர்களைப் பற்றி நான் குறிப்பிடவே இல்லை,” என்று அவர் கூறினார்.

“நாம் முதலில் இந்த நாட்டில் குடிபுகுந்ததால், அவர்கள்தான் (உண்மையில்) புலம்பெயர்ந்தவர்கள்! நாமும் மலாய்க்காரர்களும் சமம். இது நமது தாயகம்!” என்று அவர் மேற்கோளிட்டதாக உத்துசானின் செய்தி கூறியுள்ளது.

‘மாற்றம் சாதாரணமானது’

இந்நாட்டில் இந்தியர்களின் தோற்றம், கடந்த 100 ஆண்டு கால வரலாற்றை மட்டுமே கொண்டுள்ளதாக கூறும் வரலாற்று நூல்களையும் அவர் விமர்சித்தார் என உத்துசான் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அந்த விஷயத்தில், வரலாற்றைத் துல்லியமான, முழுமையான உண்மைகளுடன் வலியுறுத்த விரும்புவதாகக் குலசேகரன் கூறினார், ஒவ்வொரு மலேசியனும் உண்மையான தங்கள் சொந்த வரலாற்றை அறிந்திருக்க வேண்டும்.

உலகளாவிய ரீதியில், பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய, ‘குடியேற்றம்’ என்பது இயற்கையான செயல்முறை ஆகும்.

“நாம் மலேசியாவில் ஒன்றாக வாழ்கிறோம்,” உத்துசான் வேண்டுமென்றே பதட்டத்தை உண்டாக்கும் வகையில் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது என்று அவர் கூறினார்.