தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு எனும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள துணை முதலமைச்சர் II பேராசிரியர் பி. இராமசாமி பிரச்சினையில் பினாங்கு மாநில அரசு தலையிடாது.
பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யூ, இந்த விவகாரம் நீட்டிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், விசாரணையை முழுமையாக போலிசாரிடம் ஒப்படைப்பதாகவும் தெரிவித்தார்.
“தலையிட வேண்டிய அவசியமில்லை, காவல்துறை விசாரித்து வருகிறது. அவர்கள் தங்கள் வேலையைச் செய்யட்டும்,” என அவர் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.
துன் அப்துல் ரசாக் வளாகத்தின் (கொம்தார்) முன்னால், இராமசாமிக்கு எதிராகவும் ஆதரவாகவும் ஆர்ப்பாட்டம் செய்த இரண்டு குழுக்கள் பற்றி கருத்துரைக்கும் படி சோவ்விடம் கேட்கப்பட்ட போது அவர் இவ்வாறு பதிலளித்தார்.
50 ஆதரவாளர்கள் கலந்துகொண்ட ஒரு குழுவினர், இராமசாமிக்கு ஆதரவாக தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்தனர். பொறுப்பற்ற சில தரப்பினர் இராமசாமியை “பயங்கரவாதி” என்று கூறுவதை அவர்கள் கண்டித்தனர்.
அதேசமயம், இரண்டாவது குழுவான, இஸ்லாமிய அரசு சாரா அமைப்பைச் சேர்ந்த சுமார் 300 பேர், விடுதலைப் புலிகளுடனான தனது தொடர்பை விளக்க முடியவில்லையானால், இராமசாமி தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கூறி மாநில முதல்வரிடம் மனு ஒன்றைக் கையளித்துள்ளனர்.
அவர்கள் கொடுத்த மனுவை இன்னும் பார்க்கலில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.