நஜிப் : உம்மா பேரணி, மக்கள் ஹராப்பானில் மகிழ்ச்சியாக இல்லை என்பதற்கு ஆதாரம்

இன்று, சுமார் 1000 பேர் கலந்துகொண்ட ‘உம்மா எழுச்சி பேரணி’ பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் மீது மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதைக் காட்டுகிறது என்று முன்னாள் பிரதமர் நஜிப் கூறியுள்ளார்.

14-ம் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, ஆட்சியில் அமர்ந்த ஹராப்பான் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள் நாட்டின் மலாய் மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களை அச்சுறுத்துவது வெளிப்படையாக தெரிவதாக கூறப்படுகிறது.

“விரும்பாத சில விஷயங்களில் கோபங்கொண்ட அவர்கள், இயல்பாக இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

“மே 9-ம் தேதி முதல், அவர்கள் செய்த சில நடவடிக்கைகளின் காரணமாக, அவர்களுக்கு மக்கள் ஆதரவு குறைந்துள்ளது,” என அவர் இன்று சுங்கை காண்டிஸ்-இல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இன்று காலை, கோலாலம்பூர் சுல்தான் சுலைமான் கிளப்பில் நடந்த உம்மா எழுச்சி பேரணியில், 300 மலாய்-முஸ்லிம் அரசு சாரா அமைப்புகள் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

அம்னோ – பாஸ் தலைவர்களுடன், முன்னாள் அமைச்சரும், தற்போது பெர்சத்து உறுப்பினருமான ராய்ஸ் யாத்திமும் அப்பேரணியில் கலந்துகொண்டார்.

ராய்ஸ் யாத்திம்-இன் வருகை குறித்து கருத்துரைக்கையில், ‘அவர் ஒரு மொழி போராளி’ என்றார் நஜிப்.

“ஒருவேளை அவர் இந்தப் பேரணிக்கு வரவில்லை என்றால், அவரின் நம்பகத்தன்மை கேள்விக்குறி ஆகிவிடும்,” என்றார் அவர்.