இன்று காலை இந்தோனேசியாவின் லொம்போக் தீவை ரிக்டர் கருவியில் 6.4 என்று பதிவான நில நடுக்கம் தாக்கியபோது மலேசிய சுற்றுப்பயணி ஒருவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நில நடுக்கத்துக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின்போது லொம்போக்கின் செம்பாலுனில் ஐவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன என்றும் அவற்றில் ஒன்று 30-வயது மலேசியப் பெண்ணினுடையது என்றும் இந்தோனேசியாவின் அந்தாரா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
“எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி ஐவர் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். அவர்களைப் பற்றிய விவரங்கள் இன்னும் முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை”, என நூசா தெங்காரா பாராட் இயற்கைப் பேரிடர் மேலாண்மை வாரியத் தலைவர் ஆகோங் பிரமுஜா கூறினார்.
ஜிஞ்சானி மலை ஏறச் செல்லும் சுற்றுப்பயணிகள் செம்பாலுனில் தங்கிச் செல்வது வழக்கம்.
இதனிடையே, இந்தோனேசியாவுக்கான மலேசியாவின் துணைத் தூதர் ஜம்சாரி ஷஹரான், இறந்துபோனதாகக் கூறப்படும் மலேசியர் பற்றி முழு விவரம் இன்னும் தெரியவில்லை என்றும் முழு விவரம் பெற தூதரகம் முயன்று வருவதாகவும் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.