நூருல் இஸ்ஸா: மாற்றத்தைக் கொண்டுவர அமைச்சராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை

பெர்மாத்தாங்   பாவ்  எம்பி  நூருல்   இஸ்ஸா   1998-இல்  தன்   18வது   அகவையில்   அரசியலில்   அடியெடுத்து  வைத்தார்.

இந்த  20  ஆண்டுகளில்   எத்தனையோ   மாற்றங்கள்.  அவர்  இப்போது  மூன்றாவது    தடவையாக   எம்பி- ஆக  உள்ளார்.    இரண்டாவது   தவணைக்கு   பிகேஆர்    உதவித்    தலைவராகவும்    இருக்கிறார்.

அவருக்கு  அமைச்சராகும்    தகுதியும்   உண்டு   என்றுகூட    பேச்சு   அடிபடுகிறது. ஆனால்,  நூருல்   இஸ்ஸாவின்    நினைப்பு   வேறு   மாதிரியாக   உள்ளது.

அமைச்சரவையில்      இடம்பெறுவது    ஒன்றும்    முக்கியமல்ல     என்று   கூறும்    நூருல்  இஸ்ஸா     இப்போது   தொழில்நுட்பக்  கல்வி,   பயிற்சி(டிவிஇடி)  திட்டத்தைச்  சீரமைப்பதிலும்  சமூக   நலத்  திட்டங்களை   மேம்படுத்துவதிலும்   முனைப்புக்   காட்டுகிறார்.

“உண்மையில்,    மாற்றத்தைக்  கொண்டுவர   நீங்கள்   அமைச்சராகத்தான்  இருக்க   வேண்டும்   என்பது   அவசியமில்லை.

“இளைஞர்களுக்கு    நான்  சொல்ல   விரும்புவது    இதுதான் –  18வயதில்  எதையும்   செய்ய  முடியும்   என்ற   நம்பிக்கை   எனக்குள்   இருந்தது   அச்சம்    செயல்களைக்  கட்டுப்படுத்த   இடமளிக்கக்கூடாது  என்ற   எண்ணம்     இருந்தது.

“இப்போது   வயதான   நிலையில்   அதைத்தான்  எப்போதும்   நினைத்துக்கொள்கிறேன்”.  கடந்த    வாரம்   நாடாளுமன்ற   வளாகத்தில்    மலேசியாகினிக்கு    வழங்கிய   நேர்காணலில்    நூர்   இஸ்ஸா    அவ்வாறு   கூறினார்.

அமைச்சராக   இருப்பதன்    ஒரே   அனுகூலம்    மக்களுக்குத்   தேவையான    திட்டங்களையும்   கொள்கைகளையும்    செயல்படுத்தலாம்    என்பதுதான்   என்றுரைத்த    அவர்,   அமைச்சரவைக்கு   வெளியில்   இருந்துகொண்டும்   அதைச்    செய்யலாம்  என்றார். அதுவே   தனக்குத்   திருப்தி   அளிக்கிறது    என்றும்   சொன்னார்.

“இபோதைக்கு   என்  கருத்துகளை  முன்வைக்க  முடிகிறது. அமைச்சர்களும்    அமைச்சுகளும்   மக்களின்   அவாக்களை   நிறைவு   செய்யும்  வகையில்    பணியாற்றுவதை  உறுதிப்படுத்திக்கொள்ள  முடிகிறது.

“இதுவே  மகிழ்ச்சி  அளிக்கிறது,  சபியாவுக்கும்  ஹரித்துக்கும்   நல்ல   தாயாகவும்   இருக்க   முடிகிறது”,  என்றார்.

அம்மா  அமைச்சராக  இல்லை  என்பதில்   பிள்ளைகளும்  மகிழ்ச்சி  காண்கிறார்களாம்.  அமைச்சராக   இல்லை  என்பதால்    அவர்களின்   பாட்டியும்   துணைப்   பிரதமருமான   டாக்டர்   வான்   அசிசா   வான்  இஸ்மாயில்  போன்று   தான்   எப்போதும்   வேலை   வேலை   என்றிருப்பதில்லை    என்றார்  நூருல்  இஸ்ஸா.