கோலாலும்பூர் நீதிமன்றத்தில் நீதிமன்றப் பணியாளர்களே- நீதிபதிகள் உள்பட- கழிப்பிடங்களையும் நீதிமன்றத்தையும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏன் இந்த நிலை என்று விசாரித்து முழு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர்துறை துணை அமைச்சர் முகம்மட் ஹனிபா மைடின் பணித்துள்ளார்.
“முழுமையான, வெளிப்படையான அறிக்கை வேண்டும் என்று கூறியுள்ளேன். இதில் ஒளிவுமறைவு இருக்காது”, என்றாரவர்.
நேற்று ஒரு செய்தி, நீதிமன்ற வளாகத்தின் துப்புரவாளர்கள் சம்பளம் கொடுக்கப்படாததால் வேலை நிறுத்தம் செய்வதாகக் கூறிற்று.
ரமலான் மாதத்திலிருந்து துப்புரவுப் பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுக்கப்படவில்லை என த ஸ்டார் கூறியது. ஆனால், அரசாங்கம் ஆண்டு இறுதி வரைக்கும் துப்புரவுப் பணிகளுக்காகக் குத்தகையாளருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை ஏற்கனவே கொடுத்து விட்டதாகத் தெரிகிறது. குத்தகையாளருக்குப் பணம் கொடுத்தாயிற்று, ஆனால் துப்புரவுப் பணியாளர்களுக்குப் பணம் போய்ச் சேரவில்லை.
இதனால், நீதிமன்ற ஊழியர்களும் நீதிபதிகளும் கழிவறைகளையும் மற்ற இடங்களையும் சுத்தப்படுத்தும் நிலை.
தலைமை நீதிபதி ரிச்சர்ட் மலஞ்சோம், இன்று நீதிமன்றத்தைச் சுத்தப்படுத்த “கொத்தோங் ரோயோங்” ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அரசாங்க அலுவலகங்களில் துப்புரவுப் பணிகளைச் செய்யும் பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் கொடுக்கப்படுவதில்லை என்பதை மலேசியாகினி கடந்த ஆண்டே வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தது.