தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டு தொடர்பான பிரச்சினை பற்றி விவாதிக்க, பினாங்கு துணை முதலமைச்சர் II, பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி, நாளை புத்ரா ஜெயா மலேசிய இஸ்லாமிய அபிவிருத்தி இலாகாவிற்குச் (ஜாகிம்) செல்லவிருக்கிறார்.
பிரதமர் துறை அலுவலகத்தில், மதியம் 3.30 மணியளவில் இஸ்லாமிய விவகார அமைச்சரான டாக்டர் முஜாஹித் யூசோஃப் ராவா மற்றும் பெர்லிஸ் முஃப்தி டாக்டர் முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின் இருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராமசாமி கூறினார்.
“டாக்டர் முஜாஹித் மத்தியஸ்தராக இருப்பார், இது ஒரு ‘மூடிய’ சந்திப்பாகும். இச்சந்திப்பிற்கான முயற்சியை டாக்டர் முஜாஹித் எடுத்துள்ளார், நான் இதைத் திறந்த மனதுடன் ஏற்கிறேன், அவரின் முயற்சியை மதிக்கிறேன். இது (இந்த விவாதம்) ஒரு அசாதாரண காரியம் அல்ல.
“கலந்துபேச ஒரு சந்தர்ப்பம் வாய்த்தால், நம்மால் இப்பிரச்சனையைத் தீர்க்க முடியும், இந்தச் சந்திப்பை நான் வரவேற்கிறேன், இது ஜனநாயகத்தில் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது,” என்று இன்று பட்டர்வெர்த்தில் செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பில், மதப் போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் பங்கேற்கிறாரா என்று கேட்டதற்கு, இதில் அவர் சம்பந்தப்படவில்லை என்றார் இராமசாமி.
கடந்த வெள்ளிக்கிழமை, பினாங்கு துணை முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி சில குழுக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது பற்றி கருத்து கேட்டபோது, அது ஒரு சுயாதீனமான அரசியல் சூழலில் இயல்பான ஒன்று. சட்டத்திற்குட்பட்டு அது நடந்தால், அதனால் தனக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றார் அவர்.
இப்பிரச்சனை இப்போது போலிஸ் விசாரணையில் இருப்பதால், போலிசாரிடமே முழுமையாக ஒப்படைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.