மலேசியக் குற்றவியல் தடுப்பு அமைப்பு (எம்.சி.பி.ஃப்.) ஊழல் எதிர்ப்புக் கல்வியை, இஸ்லாமிய மற்றும் நன்னெறிக் கல்வி பாடத்திட்டங்களின் வழி பள்ளிகளில் அறிமுகப்படுத்த வேண்டுமென பரிந்துரைத்துள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை வலுப்படுத்துவதோடு, இக்கல்விமுறையானது ஊழல் அபாயங்களைப் பற்றி இளைய தலைமுறைக்குக் கற்பிப்பதற்கு உறுதுணையாக இருக்கும் என எம்.சி.பி.ஃப். மூத்தத் துணைத் தலைவர் லீ லாம் தாய் கூறியுள்ளார்.
“ஊழல் ஆபத்துகளைப் பற்றிய விழிப்புணர்வை, மாணவர்கள் மத்தியில் வளர்க்க வேண்டும் என நான் நம்புகிறேன்.
“பள்ளிகளில் இப்பாடங்களை அறிமுகப்படுத்தும் சாத்தியம் குறித்து அரசாங்கம் கவனிக்க வேண்டும். தேவைப்பட்டால், நாம் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இதன்வழி, மாணவர்கள் ஊழலின் விளைவுகளைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, துணைப் பிரதமர் டாக்டர் வான் அஸீசா வான் இஸ்மாயில், 2013-ஆம் ஆண்டு மே மாதம் வரை, 2,238 பேர் அல்லது 55.2 விழுக்காடு ஊழல் குற்றச்சாட்டு, இளம் ஊழியர்கள் மத்தியில் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போது, இளைஞர்களிடையே ஊழல் போக்கு குறைந்துவிட்டதாகவும், இது ஊழல் பற்றிய விளைவுகளை அவர் உணர்ந்துள்ளதைக் குறிக்கிறது என்றும் அவர் கூறினார்.
-பெர்னாமா