பிகேஆர் கட்சியில் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமையும் அவரின் துணைவியார் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலையும் ஓரங்கட்டும் முயற்சிகள் நடப்பதாகவும் கட்சி உறுப்பினர்கள் அம்முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்றும் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ஆனால், அம்முயற்சியை முன்னெடுப்பவர் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
அடுத்த மாத பிகேஆர் கட்சித் தேர்தலில் , நான்கு உதவித் தலைவர் பதவிகளில் ஒன்றுக்குப் போட்டியிடும் கேசவன், உறுப்பினர்கள் அன்வார் தலைவராவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“14வது பொதுத் தேர்தலில் பிகேஆர் வெற்றிக்கு அன்வார்தான் முதுகெலும்பு. அவரது 20-ஆண்டுப் போராட்டத்தின் பலன்தான் அது. அதை மறுக்கவியலாது.
“வான் அசிசாவும் அப்படித்தான். அவ்விரு தலைவர்களின் தியாகங்களைப் புறக்கணிக்க முடியாது.
“ஆனால், பிகேஆருக்குள்ளேயே சில தரப்புகள் அன்வாரையும் வான் அசிசாவையும் ஓரங்கட்ட முயல்கிறார்கள். அவர்களின் முயற்சியை முறியடிக்க வேண்டும்”, என்று கேசவன் மலேசியாகினியிடம் கூறினார்.