கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தின் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தப் பிரச்சனை, தவறான கவன ஈர்ப்பில் சென்றுள்ளது என மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கூறியது.
தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைவிட, நீதிமன்ற வளாகத்தைச் சுத்தம் செய்த நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களின் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சில வாரங்களாக, சம்பளம் பெறாத அந்தப் பணியாளர்களின் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும் என அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் ஆர் ராணி கூறியுள்ளார்.
“இது முதல் தடவையல்ல, அரசாங்க வளாகத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்கப்படவில்லை எனும் பிரச்சனை பலமுறை நிகழ்ந்துள்ளது,” என்று அவர் சொன்னார்.
துப்புரவு பணியாளர்கள், பாதுகாவலர்கள் மற்றும் தோட்டக்காரர்கள் போன்ற குறைந்த வருவாய் பெறும் தொழிலாளர்களுக்கு எதிரான அநீதி இது என ராணி விளக்கினார்.
“இதுபோன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு, அரசாங்கம் தனது வளாகங்களில் குத்தகை முறையைக் கடைபிடிப்பது அநீதியானது. இது தொழிலாளர்களின் உரிமையை மீறுவது மட்டுமல்ல, அவர்களைச் சுரண்டுவதற்கீடானது,” என்றார் அவர்.
ஒப்பந்த வேலைகள்
“பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் அரசாங்க இலாகாக்கள் செயல்படும்வரை துப்புரவு பணி, பாதுகாவல் மற்றும் தோட்ட வேலைகள் அவசியமானவை.
“ஆக, இதுபோன்ற நிரந்தரமான பணிகளைக் குத்தகை அடிப்படையில், குறைந்த சம்பளத்தில் அவர்களுக்குக் கொடுப்பது நியாயமானது அல்ல,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குத்தகை முறையிலான வேலைக்குப் பாதுகாப்பு இல்லை, அதுமட்டுமின்றி, சம்பள உயர்வு எதுவும் இருக்காது என்றார் ராணி.
“20 ஆண்டுகள் பணியில் இருக்கும் ஒரு துப்புரவு பணியாளர், ஒரு புதிய தொழிலாளர் போலவே சம்பளம் பெறுவார். ஊழியர் சேமநிதி, சொக்சோ, வருடாந்த விடுமுறைகள், மருத்துவச் சேவைகள் போன்று எந்தவொரு வசதியும் அவர்களுக்கு முறையாகக் கிடைப்பதில்லை.
“இதற்கு மேலும், குத்தகையாளர்கள் இந்தத் தொழிலாளர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை எடுத்துகொள்ளுதல், தாமதமாக சம்பளத்தைக் கொடுத்தல், சம்பளத்தில் பிடித்தம் செய்தாலும் அதனை முறையாக சொக்சோ மற்றும் சேமநிதி கணக்கில் செலுத்தாது போதல் மட்டுமின்றி, தங்கள் விருப்பப்படி அவர்களை வேலையில் இருந்து நீக்கி பல சிரமங்களை அவர்களுக்குக் கொடுக்கின்றனர்,” என்று ராணி மேலும் சொன்னார்.
முந்தைய அரசாங்கம், நூறாயிரக்கணக்கான பணத்தைச் செலவிட்டு இதுபோன்ற ஒப்பந்த அமைப்பு முறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தனது அடிவருடிகளை வளர்த்துவிட்டது. சுருக்கமாக, குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களைச் சுரண்டி, இந்தக் குத்தகையாளார்கள் இலாபம் பெற்று வந்துள்ளனர் என்று சொன்னார் ராணி.
“இந்நிலை மாற வேண்டும், இம்முறை தனியார் நிறுவனங்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருவதால், அவர்களுக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாக, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்க வளாகங்களில் இந்தக் குத்தகை அடிப்படையிலான வேலையை ஒரு நிறைவுக்குக் கொண்டுவந்து, அவர்களை நிரந்தர அரசு பணியாளர்களாக பணிக்கமர்த்த வேண்டும்,” என்று ராணி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.