இன, சமய வாதங்களை எதிர்த்துச் சுங்கை கண்டிஸ்  பி.கே.ஆரின் கண் சின்னத்திற்கு வாக்களியுங்கள், சேவியர் வேண்டுகோள்

 

 

சுங்கை கண்டிஸ் இடைத்தேர்தலில் பி.கே.ஆரின் ஸவாவி அஹமட் புஹ்னியின் வெற்றி நாட்டு மக்களுக்கே மிக முக்கியமான ஒன்றாகும். கடந்த 60 ஆண்டுகளாக இன, சமயத் தீவிர வாதச் சக்திகளின் பிடியிலிருந்து இந்நாட்டை மக்கள் விடுத்தது ஒரு சரியான முடிவு என்பதை மறுவுறுதி படுத்தும் தீர்ப்பாக அமைய வேண்டும் சுங்கை கண்டிஸ் இடைத்தேர்தல் முடிவு என்கிறார்  நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

கடந்த தேர்தலில் இன, சமய தீவிர வாதத்தையும், ஊழலையும் எதிர்த்து மக்கள் கொடுத்த மரண அடியிலிருந்து அம்னோ இன்னும் பாடம் படிக்க வில்லை. இந்நாடும் மக்களும், குறிப்பாகச் சிறுபான்மை மக்களான இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு, மிக முக்கியமானது இத்தேர்தல் வெற்றி. அதுவே, நாடு ஒற்றுமையாக முன்னேற பாதை அமைக்கும் என்கிறார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

நாட்டு மக்களின் பொருளாதார, கல்வி, சமூக மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாம் இன்னும் எத்தனை ஆண்டுகள் அம்னோவின் பிரித்தாளும் யுக்தியில் சிக்கிச்  சிதைய வேண்டும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட சேவியர் இந்தியர்களின்  பின்னடைவுகளுக்கும், துன்பங்களுக்கும் தேசிய முன்னணியின் முதுகெலும்பான அம்னோவே முக்கியக் காரணம் என்பதை அனைவரும் அறிவோம் என்றாரவர்.

முடிந்த 14வது பொதுத் தேர்தலில் பாரிசானின் மக்களை இன சமய ரீதியாக பிரித்தாளும் கொள்கைக்குக் கிடைத்த தோல்வி அக்கட்சிக்குப் பாடம் புகட்டியிருக்க வேண்டும், அதன் தீவிர இன, சமய வாதம் மற்றும் சுரண்டல், ஊழல் கலாச்சாரத்திலிருந்து அது விடுபடும் என்று எதிர்பார்த்த மக்களுக்குப் பெரிய ஏமாற்றமாக அமைந்து வருகிறது அம்னோவின் இன்றைய செயல்பாடுகள்.

முன்னாள் பாரிசான் அரசாங்கத்தின் முதுகெலும்பான அம்னோ தன்னை மேலும் அதிதீவிரவாத இஸ்லாமிய மற்றும் இனவாதக் கட்சியாக மாற்றி வருவதைத் தடுக்க பாரிசான் அம்னோ வேட்பாளர் டத்தோ லோக்மான் நூர் அடாமின் தோல்வியை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு இத்தொகுதி வாக்காளர்களுக்கு மட்டுமின்றி ம.இ.காவிற்கும் அதன் அனைத்து ஆதரவு கட்சிகளுக்கும் உண்டு. பல இன மலேசியாவிற்குத் தீவிரவாதம் பெரிய சவாலாக அமையும் என்பது நாம் அறியாத ஒன்றல்ல என்றார் அவர்.

இந்தியர்களின் குடியுரிமை விண்ணப்பங்களை முடக்கியவர் ஸாஹிட்

பல இன சமயங்களுக்கும், ஜனநாயகத்துக்கும் மதிப்பளிக்கும் துங்கு ரசாலி அம்சா மற்றும் அம்னோவின் முன்னாள் இளைஞர் பகுதித்தலைவர் டத்தோ கைரி ஜமாலுடின் போன்ற மிதவாதிகள் அம்னோவின் கட்சி தேர்தலில் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடியிடம் தோல்வி கண்டது, அம்னோ தீவிர வாதிகளின் கையில் அகப்பட்டுள்ளதைக் காட்டும் மேலும் ஒரு சான்றாகும்.

குடியுரிமை விவகாரத்தில் கடும் கெடுபிடிகளைக் காட்டிய தேசியப் பதிவு இலாகாவே தகுதியான பல ஆயிரம் இந்தியர்களின் குடியுரிமை விண்ணப்பங்களைத் தேர்ந்தெடுத்து அமைச்சரின் அங்கீகாரத்துக்கு அனுப்பியது. அக்கோப்புகளைப் பல ஆண்டுகளாகப் பரிசீலிக்க மறுத்தவர், டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி என்பது இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அவர் துணைப் பிரதமராக இருந்தபொழுது மலேசிய இந்தியர்களுக்கு எந்தச் சலுகையும் காட்டப்படாது என்று கூறியதுடன், இந்தியர்களுக்கு இலவசச் சவப்பெட்டி தருவதாகக் கூறியது எல்லாம் இந்தியர்களைக் கிள்ளுக்கீரைகளாக எண்ணும் இவரின் மனப்பான்மை எப்படிப்பட்டது என்பதைக் காட்டுகிறது, அப்படிப் பட்டவரை அம்னோ அதன் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளதை நாம் ஆழ்ந்த கவலையுடன் கவனிக்க வேண்டும்.

14 வது பொதுத்தேர்தலில் மக்கள் இன, சமயத் தீவிரவாதங்களை ஒடுக்க, இனவாதக் கட்சிகளை எதிர்த்து வாக்களித்துள்ள போதும் அம்னோ தீவிரவாதத்தை வளர்க்கும் விதமாகத் தனது கட்சியின் சொந்தச் சின்னத்தில் கிள்ளான் சுங்கை கண்டிஸ் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தது. அம்னோ வேட்பாளருக்கு ஆதரவாகப் பாஸ் இஸ்லாமியத் தீவிரவாதக் கட்சியும் இத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்திருந்தது.

இவை அனைத்தும், இன சமய கூட்டணிகளின் உறைவிடமே அம்னோதான் என்பதை நமக்கு உணர்த்துகிறது என்கிறார் கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார். அப்படிப்பட்ட  ஓர் இயக்கத்துக்கு இந்தியர்கள் வாக்கு அளிக்கலாமா என்று  அவர் கேட்கிறார். .

மலாய்க்காரர்களின் உரிமைக்காகத்தான் போட்டியிடுவதாகப் பிரச்சாரம் செய்து வரும் பாரிசான் அம்னோ வேட்பாளர் டத்தோ லோக்மான் நூர் அடாமிடம் இந்திய வாக்காளர்கள் முன்வைக்க வேண்டிய முக்கியக் கேள்வி, மலாய்க்காரர்கள் உரிமைகளை விட மற்ற இனங்களின் உரிமைகள் எவ்வகையில் மேம்பட்டுள்ளது என்பதாகும்.

கடந்த வெள்ளிக்கிழமை என்ன நடந்தது?

அம்னோவின் அட்டூழியத்திற்கும், அகந்தைக்கும் முத்தாய்ப்பு வைப்பது போல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கிள்ளான் கோனட் பிரிஜ் மகாகருமாரியம்மன் ஆலய ஆடி வெள்ளி பூஜையில் இடையூறு செய்துள்ளது.  நமது ஆலயங்களின் புனிதத்தை மாசுபடுத்தும் வகையில் ஆலயப் பூஜை, அபிஷேகங்களை இடைமறித்துப் பாரிசான் அம்னோ வேட்பாளர் டத்தோ லோக்மான் நூர் அடாம் ஆலயத்தில் பிரச்சாரம் செய்தது மற்றும் காலணிகளுடன் அவரின் தொண்டர்கள் ஆலயத்தில் பிரவேசித்தது போன்ற அத்துமீறல்களை நாம் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்திக் கண்டிக்க வேண்டும் என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.