தமிழ்ப் பள்ளி, ஆலயம், சுடுகாட்டிற்கு குரலெழுப்பியது போதும்!

‘ஞாயிறு’ நக்கீரன், தமிழ்ப் பள்ளி என்னும் கல்விச் சாலை அரசியல் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தப்படுவது அநேகமாக மலேசிய அரசியலாகத்தான் இருக்கும். மலேசிய இந்தியர் காங்கிரசும் முந்தைய தேசிய முன்னணி அரசும் தமிழ்ப் பள்ளிகளுக்காக கொடுத்த மானியக் கணக்கை வாய்ப்பாடாக ஒப்புவிக்க மறந்ததே இல்லை.

கட்டடத்திற்காக அடித்துக் கொள்ளும் நாம், அங்கிருந்து செப்பம் பெறும் நம் மாணவர்களின் தரத்தைப் பற்றி கருதுவதே இல்லை. நான் தமிழ்ப் பள்ளி மாணவன் என்று பெரும்பாலான மாணவர்கள் சொல்வதே இல்லை; “தமில் ஸ்கூல்” என்றுதான் உச்சரிக்கின்றனர். பள்ளிப் பை என்றும் சொல்லுவதில்லை; “ஸ்கூல் பேக்” என்றுதான் சொல்கின்றனர். வள்ளலாரைப் பற்றி தெரியவில்லை; சைவ சமயம் என்றால் புரியவில்லை; கால் மணி நேரம் என்றால் என்னவென்று திருப்பிக் கேட்கின்றனர். ஏதோ, யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுடன் ஆயிரக் கணக்கில் ஆண்டுதோறும் தமிழ்ப் பள்ளியை விட்டு வெளியேறுகின்றனர்.

ஆனால், இந்த மாணவர்களில் மிகப் பெரும்பாலோர் இடைநிலைப் பள்ளியில் தமிழை அடியோடு புறக்கணிக்கின்றனர். இடைநிலைப் பள்ளிகளிலும் தமிழ்க் கல்வியைத் தொடர வேண்டும் என்ற வேட்கையை அவர்களின் மனதில் ஆரம்பத் தமிழ் பள்ளிகள் விதைப்பதில்லை. இதை யெல்லாம் கருதாமல் கட்டடத்திற்கான உருமாற்றத்தில் மட்டும் காலமெல்லாம் கவனம் செலுத்துகிறோம்.

அதைப்போல ஆலயங்களைப் பொறுத்த மட்டில், கோபுரம், கலசம், சுற்றுச் சுவர் இப்படி கட்டடத்திற்காகத்தான் குரல் எழுப்பப்படுகின்றதேத் தவிர, ஆன்மிக நெறி, சமயப் பண்பு, சமயத் தெளிவு, தாய் மொழியில் இறை வணக்கம் என்பதைப் பற்றியெல்லாம் பரவலாக அக்கறைப் படுவதில்லை. ஆனால், வர்த்தக் நோக்கில் பரிகார பூசனைகளுக்கு மட்டும் வகை தொகையின்றி முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இந்து சமய ஆகமத்தில், குறிப்பாக சைவத்திலும் சரி, திருமுருகனை வழிபாட்டு நாயகனாகக் கொண்ட கௌமார வழிபாட்டிலும் அலகு குத்துவதைப் பற்றி சொல்லப்படவே இல்லை; ஆனால், துணை அமைச்சர் பொறுப்பு ஏற்றவர்கள் கூட அலகு குத்திக் கொண்டு காவடி தூக்கும் அவலம் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆலய நிருவாகங்களுக்கும் இதைப்பற்றி கவலையில்லை. என்ன நடந்தாலும் சரி, கூட்டம் கூடினால் போதும், அர்ச்சனை சீட்டுகள் விற்கப்பட்டால் போதும் என்ற மட்டில் இருக்கின்றனர்.

அதைப்போல சுடுகாடு அல்லது இடுகாட்டிற்காகவும் காலமெல்லாம் கூக்குரல் எழுகிறது. சுடுகாட்டிற்கும் இடுகாட்டிற்கும் உரிய இடம் இந்திய சமுதாயத்திடம்தான் இருக்கிறது. இதைப் பராமரிக்கவும் விரிவாக்கவும் என்று சொல்லி மில்லியன் கணக்கில் மானியம் பெறுவதும் நம் சமுதாயத்தினர்தான். இதில், வேற்று இனத்தவர் எவரும் தலையிடுவதில்லை. அப்படி இருந்தும் மனிதன் கடைசியாக இளைப்பாரும் இந்த இடங்களுக்கான பிரச்சினையும் கூக்குரலும் ஓய்ந்தபாடில்லை.

இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் யாதெனில், மழைக் கால காளான்களைப் போல அவ்வப்பொழுது முளைக்கும் அரசு சாரா அமைப்புகள்தான். இந்த அமைப்புகளைச் சார்ந்தவர்களும் சம்பந்தப்பட்ட ஆலயங்களின் நிர்வாகத்தினரும் இலட்சக் கணக்கான வெள்ளியைப் பெற்றுக் கொண்டு, பொது மக்களிடம் விரலை காட்டிவிட்டு உரலை இழுத்துக் கொள்வதைப் போல பெரும்பணத்தை வளைத்துக் கொள்கின்றனர்.

இத்தகையப் போக்கினால்தான் தகவல், ஊடகங்களில் சலிப்பு ஏற்படும் அளவிற்கு காலமெல்லாம் தமிழ்ப் பள்ளி, ஆலயம், இடுகாடு குறித்த கூக்குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

இதற்கெல்லாம் விடிவு ஏற்படும் நாள், எந்நாள்?