ஜி-25: அலி ஹம்சா பணிவிலகி பொதுச் சேவையின் நன்மதிப்பைக் காக்க வேண்டும்

பொதுச்   சேவைத்துறை   புதிய   நிர்வாகத்தால்    தொடர்ந்து   குறைகூறப்பட்டு  வருவதை   அடுத்து   அரசாங்கத்   தலைமைச்   செயலாளர்   (கேஎஸ்என்)  பணிவிலகுவதே   நல்லது    என  வலியுறுத்தப்பட்டுள்ளது.

“நம்  தலைவர்களின்  கடுமையான   அறிக்கைகளை  கேஎஸ்என்   கண்டும்  காணததுபோல்   இருந்துவிடக்கூடாது.  எல்லாவற்றுக்கும்  பொறுப்பேற்று   பொதுச்சேவையின்  நலன்  கருதி    அவர்  பணி  துறப்பதே   நல்லது.

“பொதுச்சேவைக்கு  மேலும்  கேவலமும்  அவப்பெயரும்  ஏற்படாமலிருக்க   கேஎஸ்என்  கெளரவமான  முறையில்  பணிவிலகுமாறு   கேட்டுக்கொள்கிறோம்”, என  ஜி25 செயலகம்  இன்று  ஓர்   அறிக்கையில்  கூறியது.

பெரும்பாலும்  பணி ஓய்வுபெற்ற   பொதுச்  சேவை   அதிகாரிகளைக்  கொண்ட  ஓர்   அமைப்பான   ஜி25  செயலகம்,   பொதுச்  சேவைத்துறையில்   கட்டொழுங்கையும்   தொழில்திறமையையும்  கட்டிக்காப்பது   கேஎஸ்என் -னின்  பொறுப்பு  என்று  கூறியது.

எனவே,  பொதுச்சேவை  குறைகூறலுக்கு  உள்ளாகி  இருக்கிறது    என்றால்   கேஎஸ்என்     அவரது  பொறுப்பைச்  செய்யத்    தவறிவிட்டார்   என்றுதான்  அர்த்தமாகும்.

பிரதமர்  டாக்டர்   மகாதிர்  முகம்மட்கூட   ஒரு   நேர்காணலில்,   பொதுச்  சேவையை   நம்ப  முடியாதிருக்கிறது   என்று  குறிப்பிட்டிருந்தார்.

அரசாங்க  உயர்    அதிகாரிகளில்   பலர்   முன்னைய   அரசாங்கத்தின்   கைங்கரியத்தால்    ஊழலில்   ஊறிப்  போனவர்கள்   என்பதால்   புதிய   நிர்வாகம்   அதன்   சீரமைப்புக்   கொள்கைகளை   அவர்களை   நம்பி  ஒப்படைக்கத்    தயங்குவதாக  அவர்   சொன்னார்.

“பொதுச்சேவை   நிர்வாகத்தின்   வலிமைக்கும்  நிலைத்தன்மைக்கும்   தூணாக   விளங்கிய  காலம்  போய்,  இப்போது  உயர்   அதிகாரிகளே   நாட்டின்  பிரச்னைகளுக்குக்  காரணமாக   இருப்பதை  நினைத்தால்   வருத்தமாக   இருக்கிறது.

“அப்படிப்பட்டவர்களின்   எண்ணிக்கை   குறைவுதான்,   பெரும்பாலான   அரசு   அதிகாரிகள்   நடுநிலைமையுடன்   கடமை    ஆற்றுபவர்கள்.  ஆனாலும்  சில  கெட்டவர்களின்   செயலால்   பொதுசேவை  முழுவதுக்குமே   அவப்பெயர்  ஏற்பட்டு  விட்டது”,  எனச்  செயலகம்  கூறிற்று.