கெடா, கூலிம், லாடாங் டப்ளின் பிரிவு 7 தமிழ்ப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அது மூடப்படும் அபாயத்தில் உள்ளது. அது மூடப்படாமல் பாதுகாக்க உதவ வேண்டும் எனக் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.
அங்கிருந்த பல ரப்பர் தோட்டங்கள் மூடப்பட்டதால் அப்பள்ளியின் மாணவர் குறைந்து கொண்டு வந்து இப்போது எட்டாக உள்ளது என கெடா தமிழ் இளைஞர் மணிமன்றத் தலைவர் எல்.ரஜினி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“மாணவர்கள் அனைவரும் 30கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூலிமைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கான போக்குவரத்துக்கு அரசியல் தலைவர்களும் வணிகர்களும் ஏற்பாடு செய்துள்ளனர். பள்ளி மூடப்படாமல் காப்பதற்காகவே இவ்வாறு செய்யப்படுகிறது.
“பள்ளியை கூலிமுக்கு அருகில் இடமாற்றம் செய்யுமாறு கல்வி அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறோம்”, என்றாரவர்.
அப்பள்ளி காலனிய காலம் தொடங்கி இருந்து வருவதாக ரஜினி விளக்கினார். அதைச் சுற்றி இருந்த தோட்டங்களில் வாழ்ந்த மக்கள் அருகில் உள்ள நகரங்களுக்கு மாறிச் சென்று விட்டதால் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டது.
பள்ளி நிர்வாக வாரியமும் பழைய மாணவர் சங்கமும் கூலிம், தாமான் முத்தியாராவில் பள்ளியை அமைப்பதற்குப் பொருத்தமான இடமொன்றை அடையாளம் கண்டு வைத்திருந்தனர்.
“அதைச் சுற்றி 500 இந்திய குடும்பங்கள் வாழுகின்றன.
“ஆனால் அங்கு பள்ளி அமைக்கும் முயற்சியைச் சிலர் சதி செய்து கெடுத்து விட்டார்கள்”, என ரஜினி தெரிவித்தார்.
மலேசியாகினியிடம் பேசிய கூலிம் மஇகாவைச் சேர்ந்த எஸ். ஆனந்தன், தன் கட்சியும் முந்தைய அரசாங்கமும் லாடாங் டப்ளின் பிரிவு 7-இல் தங்கு வசதி கொண்ட பள்ளி அமைக்க திட்டமிட்டிருந்ததாகவும் இப்போதைய அரசு அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
“அப்போதைய கல்வி அமைச்சர் மகாட்சிர் காலிட் லாடாங் டப்ளின் 7-இல் இப்போது பள்ளி உள்ள இடத்தில் புதிய பள்ளி ஒன்று கட்ட வாய்மொழியாக ஒப்புக்கொண்டார். அத்திட்டத்தை இப்போதைய பக்கத்தான் ஹரப்பான் அரசு செயல்படுத்த வேண்டும்”, என ஒரு செனட்டரான ஆனந்தன் கூறினார்.