அண்மையில் தன்னைக் கேலி பேசிய நஜிப் இராசாக்கை, ‘பண்பில்லாதவர், முதுக்குக்குப் பின்னாடி பேசுபவர்’ என பாதுகாப்பு அமைச்சர் முகமட் சாபு சாடியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் சந்தித்தப்போது, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எனும் வகையில் அந்த முன்னாள் பிரதமர் அந்தக் கருத்தை நாடாளுமன்றத்திலேயே தெரிவித்திருக்க வேண்டும் என்றார் மாட் சாபு.
“வெளியில் விமர்சித்துள்ளதால், அதை நான் கருத்தில் கொள்ள விரும்பவில்லை. இது ‘ஜெண்டில்மேன்’ தனமில்லை, கோழைத்தனமானது, இதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை… ,” என்று அவர் கூறினார்.
பாதுகாப்பு அமைச்சரான அவரின் திறமை பற்றி, நஜிப் பேசியது தொடர்பில் கோத்தா ராஜா எம்பி-யுமான மாட் சாபு இவ்வாறு கருத்துரைத்தார்.
முன்னதாக, பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமானா கட்சியின் தலைவர் மாட் சாபு, ஒரு நகைச்சுவைப் பொருளாகக் காட்சியளிக்கிறார் என நஜிப் கூறியிருந்தார்.
14 ஆண்டுகளாக, பாதுகாப்பு அமைச்சர் பதவில் இருந்த நஜிப், மாட் சாபு அப்பதவிக்கு ஏற்றவர் அல்ல என சுங்கை கண்டிஸ் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாக எஃப்.எம்.தி. இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
“பாதுகாப்பு அமைச்சர் ஒரு கார்டூன். கார்டூன் போலவே தொப்பி அணிந்திருக்கிறார், போர்க் கப்பலில் ஏறிய பிறகும், மீன் குழம்பு சமைப்பது பற்றி பேசுகிறார்.
“நீங்கள் ஒரு பாதுகாப்பு அமைச்சர், நாட்டின் பாதுகாப்பு கொள்கையைப் பற்றி பேசுங்கள், மீன் கறி சமைப்பது பற்றி பேசாதீர்கள். இதற்கு பெயர் பாதுகாப்பு அமைச்சர் இல்லை, இது ‘ஜோக்கர்’ , கார்ட்டூன்,” என நஜிப் கூறியதாக தெரிகிறது.
மேலும் பேசிய மாட் சாபு, பாதுகாப்பு அமைச்சராக தனது திறமையைப் பற்றி, தற்போது கருத்து தெரிவிக்க இயலாது என்றார்.
“இப்போதுதான் இரண்டு மாதங்கள் ஆகின்றன…. இரண்டே மாதத்தில் ஒருவரின் திறமையை மதிப்பிடுவது சரியல்ல.
“நான் என் அமைச்சின் மீது கவனம் செலுத்தி வருகிறேன். என் திறமையை மதிப்பிடுவது…. பொறுத்திருந்து பாருங்கள்,” என்றார் அவர்.