கல்வி அமைச்சின், ஓர் இலாகா சார்ந்த உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்களை அவ்வமைச்சு விசாரித்து வருகிறது.
கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்ட அநாமதேய கடிதம் ஒன்று மலேசியாகினிக்கும் கிடைத்துள்ளது.
மலேசியாகினி தொடர்புகொண்ட போது, அந்த விஷயம் தற்போது விசாரிக்கப்பட்டு வருவதைக் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் உறுதிபடுத்தினார்.
“இந்த விஷயம் எங்களுடைய கவனத்திற்கு வந்துள்ளது, அதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதை எனது அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்,” என்று அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஓர் இலாகாவின் இயக்குநரும் இரு துணை இயக்குநர்களும் இவ்விஷயத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்த அநாமதேய எழுத்தாளர் கூறியுள்ளார்.
ஓர் இயக்குநர் பெண் பணியாளர்களுக்கு வார்த்தைகளாலும் செயல்களாலும் பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாகவும் அதில் தானும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அந்தக் கடிதத்தில், குற்றச்சாட்டுகளின் ஆதாரம் தெளிவாக குறிப்பிடவில்லை.
அமைச்சின் ‘தெண்டர்’ கொள்முதலில், இரு துணை இயக்குநர்களும் ஊழல் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில், 1பெஸ்தாரிநெட் மற்றும் ஃபோரோக் வி.எல்.இ. திட்டங்களில், ஒரு தனியார் நிறுவனத்தின் முயற்சிகளை ஊக்குவித்ததும் இதில் அடங்கும்.
“ஆனால், அந்த இயக்குநருக்கு எதுவும் தெரியாது (துணை இயக்குநர்களின் செயல்களைப் பற்றி) – அவர் பெண்களை மட்டுமே துன்புறுத்தியுள்ளார்,” என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விளக்கம் பெற, மலேசியாகினி முன்னாள் கல்வி அமைச்சர் மஹ்ட்சீர் காலிட்டைத் தொடர்புகொண்டு வருகிறது.