அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் அலி அம்சாவைச் சுயமாக பதவி விலக வலியுறுத்துவது, முன்னாள் மூத்த அரசு ஊழியர்களான ஜி25-ன் சொந்தக் கருத்து என்று துணைப் பிரதமர் வான் அஸிஸா கூறியுள்ளார்.
நிர்வாக மற்றும் இராஜதந்திர அதிகாரிகளின் (பிதிடி) உயர் பதவியில் அதிகபட்ச நியமனம் பிரதமரின் அதிகார எல்லைக்குட்பட்டது ஆகும்.
“இப்போது எங்களால் சில வதந்திகளைக் கேட்க முடிகிறது, ஆனால் ஒட்டுமொத்தமாக, பிதிடி தொடர்ச்சியான சேவையை வழங்கியுள்ளது, நாங்கள் (பக்காத்தான் ஹராப்பான்) பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற நாளில் இருந்து,” என அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜி25, அலி அம்சாவைக் கௌரவமான முறையில் பதவி விலக வலியுறுத்துவது தொடர்பில் வான் அஸிசா அவ்வாறு கருத்துரைத்தார்.
புதிய தலைமைத்துவத்தின் கீழ், நாட்டின் பொதுச் சேவை துறை விமர்சனத்திற்கு ஆளாகியிருப்பதன் காரணமாக இந்த அழைப்பு விடப்பட்டுள்ளது.
அனைத்து அரசாங்க ஊழியர்களும், அலியின் ‘தியாகத்தை’ பாராட்டுவர் என்றும் அக்குழு கூறியுள்ளது.
முன்னதாக, பிரதமர் துன் டாக்டர் மகாதீர், அரசு ஊழியர்கள் முன்னாள் அரசாங்கத்திற்கு இன்னும் விசுவாசமாக இருப்பதால்; புதிய அமைச்சரவையின் சீர்திருத்த செயற்பட்டியலில் அவர்களில் சிலர் ஈடுபாடு இல்லாமல் இருக்கின்றனர் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
எனவே, அவர்களை நம்பி, சீர்திருத்தக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவது புதிய நிர்வாகத்திற்குக் கடினமாக இருக்கிறது என்றும் மகாதீர் கூறினார்.