மலேசிய நிதி அமைச்சு(எம்ஓஎப்) சார்ந்த நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளில் மேலும் பலர் பணி விலகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்நிறுவனங்களின் இயக்குனர் வாரியங்களில் உள்ள அரசியல் நியமனதாரர்கள் பதவி விலக வேண்டும் என்று புத்ரா ஜெயா “தெளிவாகவே பணித்திருப்பதாக” த ஸ்டார் ஆன்லைன் கூறியது.
ஆனால், அதில் இடம்பெற்றுள்ள அரசாங்க அதிகாரிகளுக்குப் பிரச்னை இல்லை.
எம்ஓஎப்-இன்கீழுள்ள கெரேத்தா அப்பி தானா மலாயு பெர்ஹாட்(கேடிஎம்பி), மலேசிய ரெயில் லிங் சென்.பெர்ஹாட் (எம்ஆர்எல்) போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அந்தப் “பணி விலகல்” உத்தரவு அனுப்பப்பட்டிருப்பதாக ஒரு வட்டாரம் த ஸ்டாருக்குத் தெரிவித்தது.
கருவூலத்தின் இணையதளத்தின்படி எம்ஓஎப், 68 நிறுவனங்களில் பெரும்பான்மை பங்குதாரராக உள்ளது. மேலும் 150 நிறுவனங்கள் மறைமுகமாக அதற்குச் சொந்தமாக உள்ளன.
கேடிஎம்பி தலைவராக இருப்பவர் அம்னோ அரசியல்வாதி நவாவி அகமட். இவர் லங்காவியில் பிரதமர் மகாதிர் முகம்மட்டை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றவர்.
கருவூலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் இர்வான் செரிகார் அப்துல்லா எம்ஆர்எல் தலைவர். டேவான் நெகாரா முன்னாள் தலைவர் அபு ஸஹார் ஊஜாங் இண்டா வாட்டர் கொன்சோர்டியம்(ஐடபள்யுகே) தலைவர்.
பிராசரனா மலேசியா தலைவர் முன்னாள் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார், ஷரிகாட் பெரூமாஹான் நெகரா பெர்ஹாட் தலைவர் அம்னோவின் மெர்சிங் எம்பி அப்துல் லத்திப் அகமட்.
இவர்கள் பணி விலகுவதால் அந்த நிறுவனங்களில் 700 இடங்கள் காலியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எல்லா இடங்களும் நிரப்பப்படாது என்று தெரிகிறது.
கடந்த வாரம், எம்ஓஎப்-புக்குச் சொந்தமான கஜானா நேசனல் பெர்ஹாட்டின் இயக்குனர் வாரியம் ஒட்டுமொத்தமாக பதவி விலகியது.
அதற்கு மகாதிர் இப்போது தலைவராக உள்ளார். பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி அதன் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார்.