சிருலைத் திருப்பி அனுப்ப ஆஸ்திரேலியா தயாராக இல்லை

கொலைத்தண்டனையிலிருந்து   ஆஸ்திரேலியாவுக்குத்   தப்பி  ஓடிய   சிருல்   அஸ்ஹார்   உமரை   அந்நாடு  கொள்கையின்   காரணமாக  மலேசியாவுக்குத்    திருப்பி  அனுப்ப  முடியாத   நிலையில்   இருப்பதாக   அதன்  வெளியுறவு  அமைச்சர்  ஜூலி  பிஷப்  கூறினார்.

“கொள்கைதான்   ஒரு   பிரச்னையாக  உள்ளது.  ஒருவரை   அவரது  நாட்டுக்குத்   திருப்பி   அனுப்புமுன்னர்,   திருப்பி  அனுப்பப்படும்   ஆளுக்கு  அவரது   நாட்டில்   மரண  தண்டனை  விதிக்கப்படுமா  என்பதை    ஆஸ்திரேயா  கவனிக்கிறது”,  என்றாரவர்.  ஆஸ்திரேலியா  மரண  தண்டனையை   ஆதரிப்பதில்லை.

இன்று   துணைப்  பிரதமர்   டாக்டர்   வான்   அசிசா  வான்  இஸ்மாயிலை   நாடாளுமன்றத்தில்   சந்தித்த   பின்னர்   அவர்   செய்தியாளர்களிடம்  பேசினார்.

மலேசியா  மரண  தண்டனையை  இரத்துச்   செய்ய   ஆலோசிப்பது    குறித்து   விவாதித்ததாக  பிஷப்   தெரிவித்தார்.

“மரண  தண்டனை  இரத்துச்  செய்யப்படுவதை   நாங்கள்   ஆதரிக்கிறோம்”,  என்றாரவர்.

சிருல்  பற்றி   நிறைய   பேசப்பட்டாலும்  அவரைத்   திருப்பி  அனுப்புமாறு  கேட்டுக்கொள்ளும்   முறையான  விண்ணப்பம்  எதையும்  மலேசியா  இதுவரை   செய்ததில்லை   என்றவர்   சொன்னார்.

“நான்  மீண்டும்  சுட்டிக்காட்ட   விரும்புகிறேன்.  இவ்விவகாரத்தில்  திருப்பி  அனுப்பக்  கோரி   முறையான  விண்ணப்பம்   எதுவும்   செய்யப்படவில்லை.

“அவர்   குடிநுழைவுத்துறையால்   தடுத்து   வைக்கப்பட்டுள்ளார்.  மலேசிய   அரசாங்கம்   முறையான  விண்ணப்பம்   எதையும்   செய்து  கொள்ளவில்லை.    பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டும்   இதை   உறுதிப்படுத்தியுள்ளார்”,  என  பிஷப்   கூறினார்.

கூட்டரசு   நீதிமன்றம்,   2006-இல்  மங்கோலியப்  பெண்மணி   அல்டான்தான்யா  ஷரீபுவைக்    கொலை    செய்த  குற்றத்துக்காக   போலீஸ்  மின்னல்  படை  வீரர்களான    சிருலுக்கும்  அஸிலா  ஹட்ரிக்கும்  2015-இல்  மரண   தண்டனை  விதித்தது.

கொலைக்குத்   தண்டனை  பெற்றபோது   அவ்விருவரும்  அப்போதைய   துணைப்   பிரதமர்    நஜிப்   அப்துல்  ரசாக்கின்  மெய்க்காப்பாளர்களாக  பணியாற்றிக்  கொண்டிருந்தனர்.

அல்டான்துன்யா  சுட்டுக்கொல்லப்பட்டு   அவரது  உடல்   இராணுவத்தினர்  பயன்படுத்தும்  வெடிமருந்துகளைக்  கொண்டு   சிதறடிக்கப்பட்டது.

அஸிலா  மரண  தண்டனை  பெற்று  சிறையில்  இருக்கிறார்.  மற்றொரு  கொலையாளியான  சிருல்   உச்ச  நீதிமன்றத்   தீர்ப்புக்கு  முன்னர்   ஆஸ்திரேலியாவுக்குத்   தப்பி   ஓடிவிட்டார்.