நஜிப்: அருளுக்கு ரிம 5மில்லியன் கொடுத்தது சரியே; 1எம்டிபி-இல் அவர் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டார்

முன்னாள்    பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்   1எம்டிபி  முன்னாள்  தலைமைச் செயல்   அதிகாரி   அருள்  கண்டா  கந்தசாமிக்கு  ரிம5மில்லியன்  போனஸ்  கொடுக்கப்பட்டதைச்   சரிதான்   என்று   தற்காத்துப்   பேசியுள்ளார்.

நஜிப்  பிரதமராகவும்   நிதி   அமைச்சராகவும்   இருந்தபோது  அத்தொகையைக்  கொடுப்பதற்கு   ஒப்புதல்   தெரிவித்திருந்தார்   என்று   நேற்று   நிதி  அமைச்சர்  லிம்  குவான்   எங்   தெரிவித்திருந்தார்.

இன்று  நாடாளுமன்ற  வளாகத்தில்   நஜிப்பிடம்   அது   குறித்து   வினவியதற்கு  அருள்  கந்தா   1எம்டிபி-இல்   சேர்வதற்குமுன்    அதைவிட   அதிகமாக   சம்பளம்  வாங்கிக்   கொண்டிருந்தார்   என்று  கூறினார்.

“அவர்  ஐக்கிய  அமீரகத்தில்     ஒரு   பொருளகத்தில்   பணி  புரிந்தபோது  அதனினும்  அதிகமாக   சம்பாதித்துக்  கொண்டிருந்தார்.  1எம்டிபி-இல்  சேர்ந்தபோது   சம்பளத்தைக்  குறைத்துக்  கொண்டார்.

“அதை  வைத்துத்தான்  பார்க்க   வேண்டும்.  அவருக்குக்  கொடுக்கப்பட்டது   1எம்டிபி-இல்  சேர்வதற்குமுன்   அவர்  பெற்றுக்கொண்டிருந்ததைவிட  குறைவான  தொகைதான்”,  என்றார்.

1எம்டிபி-இல்  அருள்   சிறப்பாகப்  பணி  புரிந்திருப்பதாக   நஜிப்   குறிப்பிட்டார்.

“ரிம50 பில்லியன்  கடனை  ரிம30 பில்லியனுக்குக்  குறைத்தார். அது  அவரது   சாதனை”,  என்று   நஜிப்  சொன்னார்.

அருள்  கந்தாவுக்கு   ஜனவரியில்   ரிம2.5 மில்லியனும்  ஜூனில்  மேலும்  ரிம2.5 மில்லியனும்  கொடுக்கப்பட்டதாக  லிம்   கூறியிருந்தார்.