பெண்களின் உள்ளாடை வியாபார முதலீட்டில் கஜானா ரிம80 மில்லியனை இழந்தது, அஸ்மின் நஜிப்பிடம் கூறினார்

 

மலேசியாவின் கஜானா நேசனல் பெண்களின் உள்ளாடை வியாபரத்தில் யுஎஸ்$20 மில்லியன் (ரிம80 மில்லியன்) முதலீடு செய்திருந்ததாக பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலி கூறினார்.

கஜானா அதன் முதலாவதான நோக்கத்திலிருந்து திசைமாறி விட்டது என்ற குற்றச்சாட்டு குறித்து நஜிப் அப்துல் ரசாக் (பிஎன் – பெக்கான்) கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அஸ்மின் இத்தகவலை வெளியிட்டார்.

நாடாளுமன்றத்தில் அஸ்மின் அவரது அமைச்சின் விவாதத்தை முடித்து வைக்கும் உரையை ஆற்றிக்கொண்டிருந்த போது குறுக்கிட்ட நஜிப், கஜானா அதன் நோக்கத்திலிருந்து விலகிச் சென்று விட்டதாக பிரதமர் மகாதிர் முன்பு கூறிக்கொண்டது பற்றி கேள்வி எழுப்ப விரும்புவதாகக் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் கஜானா அதன் சொத்துகளின் மதிப்பை ரிம33 பில்லியனிலிருந்து ரிம134.5 பில்லியனுக்கு உயர்த்துவதில் வெற்றி கண்டுள்ளது என்று நஜிப் கூறினார்.

நான் கஜானாவின் தலைவராக இருந்த காலத்தைத் தற்காத்துள்ள முயற்சிக்கவில்லை, ஆனால் கஜானா எப்படி அதன் முதலாவதான நோகத்திலிருந்து தடம்புரண்டு விட்டது என்று கூறப்படுவதற்கான விளக்கத்தைப் பெற விரும்புகிறேன் என்று முன்னாள் பிரதமர் நஜிப் என்று மேலும் கூறினார்.

இதற்குப் பதிலாக, அஸ்மின் அலி கஜானாவின் சமீபத்திய முதலீடுகளைச் சுட்டிக் காட்டினார்.

எடுத்துக் காட்டாக, பெண்களின் உள்ளாடைகள் … மகளிரின் மார்புக்கச்சுகள் ஆகியவற்றை விற்கும் ஓர் ஓன்லைன் சில்லறை வியாபாரி மூலம் கஜானா கிட்டத்தட்ட யுஎஸ்$20 மில்லியனை முதலீடு செய்திருந்தது. இறுதியில், அக்கணக்கு ஒட்டுமொத்த நட்டம் என்று மூடப்பட்டது. இது ஒரு மிகச் சிறிய எடுத்துக்காட்டு என்றார் அஸ்மின்.

இதைவிட மிகக் கடுமையான கஜானாவின் முதலீடு முற்றிலும் கைவிடப்பட்ட ரிம3 பில்லியன் முதலீடுகள் என்றாரவர்.

இந்த முதலீடு ஒரு தனியார் மூலம் ஒரு வங்கியை கையகப்படுத்துவதற்காகச் செய்யப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தை சம்பந்தப்பட்ட வங்கியுடன் நேரடியாக நடத்தப்பட்டாமல் தனியார் மூலம் நடத்தப்பட்டதால், ரிம3 பில்லியன் கணக்கு நட்டமாக மூடப்பட்டது என்று அஸ்மின் மேலும் கூறினார்.

இது சம்பந்தமாக இதற்கு முன்னதாக வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில், சுவிஸ் வங்கி யுபிஎஸ்-சில் கஜானா 2.6 விழுக்காடு பங்கைப் பெறுவதற்காக யுஎஸ் வங்கி லேமான் பிரதர்ஸ் மூலம் எடுத்துக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் லேமான் பிரதர்ஸ் திவாலாகி விட்டதால் கஜானாவிற்கு ரிம3 பில்லியன் நட்டத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதிலிருந்து பாதிப் பணம் திரும்பப் பெறப்பட்டதாக கூறப்பட்டது.