– கி.சீலதாஸ், ஆகஸ்ட் 1, 2018.
கடந்த 21.7.2018 ஆம் தேதி, குளுவாங் கல்வி சமூக நல ஆய்வு அறவாரியத்தின் ஏற்பாட்டில் “வானமே எல்லை தன்முனைப்புத் தூண்டல்” நிகழ்ச்சி நடந்தது. இதில் பல சிறப்புகளில் அரச மலேசிய சுங்கத் துறையின் தலைமை இயக்குனர் டத்தோஸ்ரீ சுப்பரமணியம் துளசி கலந்துகொண்டு உரை ஆற்றியது ஒன்றாகும். இந்த நிகழ்ச்சியில் மலேசியா அரசின் தலைமைச் செயலாளர் தான்ஸ்ரீ அலி ஹம்ஸாவும் அவர்தம் மனைவி, கலந்துகொண்டதும் நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பைத் தந்தது. அடுத்து, ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் இராமகிருஷ்ணன் கலந்துகொண்டு உரையாற்றியது அனைவருக்கும் மகிழ்ச்சி. அறவாரியத்தின் குளுவாங் தலைவர் கிருஷ்ணசாமி தனியார் துறையில் உயர் பதவி வகிக்கிறார். இந்த நால்வரிடமும் (தான்ஸ்ரீ அலி ஹம்ஸா, டத்தோஸ்ரீ சுப்பரமணியம் துளசி, டாக்டர் இராமகிருஷ்ணன், கிருஷ்ணசாமி) ஓர் ஒற்றுமை காணமுடிந்தது. இந்த நால்வரின் பூர்வீகமே தோட்டப்புறத்தில் ஆரம்பித்தது. நால்வரும் தோட்டத்தில் பிறந்தவர்கள். அவர்கள் பெற்றோர் தோட்டங்களில் சாதாரண தொழிலாளர்களாக உழைத்து, சம்பாதித்த ஊதியத்தால் குடும்பத்தை காத்தவர்கள்.
இந்த நால்வரும் வறுமைக் கோட்டில் சிக்குண்டுத் தவித்த பெற்றோர்களைக் கொண்டிருந்தவர்கள். பெற்றோர்கள் மட்டும் நினைத்து, உழைத்து சம்பாதித்து இவர்களை உயர்க்கல்வியைப் பெறுவதற்குப் பொருளாதார வசதி கிடையாது. ஆனால், அந்த வறுமையை ஒரு காரணமாகக் காட்டி தங்கள் படிப்பில் கவனத்தைத் தளரவிடவில்லை. அலி ஹம்ஸா, சுப்பரமணியம் துளசி ஆகியோரின் உடன்பிறப்புகள் ஏராளம். பிள்ளை பாக்கியம் தந்த இறைவன் இவர்களின் பெற்றோர்களுக்குப் பொருள் பாக்கியத்தைத் தரவில்லை. அதனால் இவர்கள் மனம் தளர்ந்தார்களா? வழி தவறிப் போனார்களா? கிடையாது. படித்தார்கள். நன்கு படித்தார்கள். கடமை உணர்வோடு படித்தார்கள், கட்டுப்பாடான மனநிலையோடு படித்தார்கள். அலி ஹம்ஸா இன்று மலேசிய அரசின் தலைமைச் செயலாளர் மட்டுமல்ல அமைச்சரவைக்கும் இவர்தான் செயலாளர்.
9.5.2018 ஆம் தேதி, பதினாங்காம் பொதுத் தேர்தல் முடிவுகள் நம்பிக்கை கூட்டணி மலேசிய அரசை அமைக்கும் தகுதியைப் பெற்றது. துன் டாக்டர் மகாதீரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையினர் தலைவராகத் தேர்ந்தெடுத்து அவரே அடுத்த பிரதமர் என்று உறுதிப்படுத்தியபோதிலும் சங்கடமான இழுபறி நிலை வடிவம் பெற்றதை நாம் மட்டுமல்ல உலகமே கண்டது. பிரதமரின் நியமனம் தாமதப்படுத்தப்பட்டபோது என்ன நடந்தது? டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கின் கட்சி தோல்வி கண்டுவிட்டது. அவர் பிரதமராக நீடிக்க முடியாது. அவரைப்போலவே, அவரின் மற்ற அமைச்சர்களின் நிலையும். தலைபோனபின் வாலுக்கு ஏது பாதுகாப்பு? மகாதீரைப் பிரதமராக அதிகாரப்பூர்வமாக நியமிப்பதில் ஏற்பட்ட தாமதத்தைக் குறித்து அவர் சொன்னது என்ன? அரசு இல்லை, அதாவது நஜீப்பும் அவரின் கட்சியும் தோல்வியுற்றதால் அரசு கிடையாது. தாம் அரசு பொறுப்பேற்பதில் தாமதம் நேர்வது அரசு இல்லாத நிலையை நீட்டிக்கும். எனவே, மாமன்னர் உடனடியாக தம்மை பிரதமராக நியமித்து அரசு இயந்திரம் இயங்க வழிகோலவேண்டும் என்பதே மகாதீரின் கண்டிப்பான ஆலோசனை, கோரிக்கை. இவ்வளவு சொல்லியும் மகாதீரைப் பிரமராக நியமிப்பதில் தாமதம் காட்டப்பட்டது. இங்கே ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. அதிகாரப் பூர்வமான பிரதமர் இல்லாத அந்தச் சிறிய இடைவேளையின்போது யார் நாட்டை நிர்வகித்தது? மாமன்னர் மட்டும் நிர்வகிக்க முடியாது. அவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் நாட்டை நிர்வகிக்க முடியும். அமைச்சரவை இல்லை – யார் நிர்வகிப்பது?
அமைச்சரவை இல்லாத காலகட்டத்தில் மலேசியாவின் தலைமைச் செயலாளரின் பொறுப்பு அளப்பரிது. தான்ஸ்ரீ அலி ஹம்ஸா 9.5.2018இல் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைப் பற்றி பேசவே இல்லை. ஆனால், மலேசியாவை நெருக்கடியான நிலையில் இருந்து காப்பாற்றிய திறமை வாய்ந்த நிர்வாகி அவர் என்று சொல்லுவதில் யாதொரு பிழையும் இல்லை.
அடுத்து, டத்தோஸ்ரீ சுப்பரமணியம் துளசி, சுங்கத் துறையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்ட முதல் தமிழர். தோட்டத்தில் பிறந்தாலும் நல்ல உழைப்பின்வழி அரசில் உயரிய நிலையை அடைய முடியும் என்பதை விளக்கினார். அதோடு சுங்கத்துறையில் இந்தியர்கள் சேர்வதில் எந்தத் தடங்களும் கிடையாது. இந்திய வேட்பாளர்கள்தான் தடங்கலை ஏற்படுத்திக் கொள்கின்றனர் என்பதையும் விளக்கினார். வேலைக்கு மனு சமர்ப்பித்தப்பின் நேர்காணல் இருக்கும். அதற்குப் போகும்போது எப்படிப்பட்ட உடையை உடுத்திக்கொள்ளவேண்டும் என்பதை விளக்கியவர், பொது அறிவை வளர்த்துக்கொண்டால்தான் கேட்கப்படும் பல கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியும் என்பதையும் தெளிவுப்படுத்தினார்.
ஜொகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் இராமகிருஷ்ணன் மாணவர்கள்தான் தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பதை தெளிவுப்படுத்தினார். இதே தோரணையில்தான் கிருஷ்ணசாமியின் பேச்சும் அமைந்திருந்தது.
மேலே குறிப்பிட்டவர்கள் அனைவரும் தோட்டத்தில் பிறந்தவர்கள். ஏழைப்பெற்றோர்களைக் கொண்டிருந்தனர். உழைப்பே மூலதனமாக வைத்து இன்றைய உயரிய நிலையை அடைந்துவிட்டனர்.
அறவாரியத்தின் நிகழ்ச்சி மாணவ சமுதாயத்திற்கு வழிகாட்டியாக அமைந்து இருந்தது. குழுமியிருந்த மாணவர் சமுதாயம் உழைப்பால், நேர்மையால், நல்லொழுக்கத்தில் கவனம் செலுத்தினால் எல்லை இல்லா உயர்வை எய்தலாம். அனைவராலும் முடியும் என்பதை நினைவுப்படுத்தியது.
தான்ஸ்ரீ அலி ஹம்ஸாவின் உயரிய நிலை, டத்தோஸ்ரீ சுப்பரமணியம் துளசியின் உயர்வு, இராமகிருஷ்ணனின் விடாமுயற்சியால் அடைந்த உயர்ந்தநிலை, கிருஷ்ணசாமியின் உழைப்புக்குக் கிடைத்த மகிழ்ச்சியான பரிசு பற்றி சிந்திக்கும்போது எல்லா இனங்களோடு இணைந்து, பழகி செயல்பட்டால் முன்னேற்றத்திற்கு வழிகாணலாம் என்பது உறுதியாகிறது. மற்ற இனச் சகோதரர்களோடு இணைந்து, பழகி அவர்களோடு நட்பை வளர்த்து அவர்களோடு கருத்துக்களைப் பறிமாறி நல்ல முன்னேற்றம் காணலாம். அப்படிப்பட்ட நல்ல கலாச்சாரத்தை நம் மாணவர்கள் பேணவேண்டும். அதில் உறுதியாக இருக்கவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
இந்த நல்ல தலைவர்களை எல்லாம் பார்த்து, அவர்களின் வாழ்க்கைப் பின்னணியை நினைத்துப் பார்க்கும்போது தோட்டத்தில் பிறந்தவர்களுக்குத்தான் உயரிய பதவி கிடைக்கும், என்னைப் போன்ற தோட்டத்தில் பிறக்காதவர்களுக்கு அது எட்ட முடியாத வானம் என்று தோன்றியது. வறுமை மட்டும் போதாது போலும்!