அதி வேக இரயில் திட்டம்(எச்எஸ்ஆர்) மீது பேச்சுகளைத் தொடங்கும் மலேசிய ஆலோசனையை சிங்கப்பூர் வரவேற்பதாக அக்குடியரசின் போக்குவரத்து அமைச்சு(எம்ஓடி) கூறியது.
மலேசிய பொருளாதார விவகார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலியிடமிருந்து 2018, ஜூலை 23இல் ஒரு கடிதம் வந்ததாகவும் அதில் மலேசிய அரசாங்கம் எச்எஸ்ஆர் திட்டம் பற்றிய விவரங்களை ஆராய்ந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் அதன்மீது சிங்கப்பூருடன் பேச்சுகளைத் தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் எம்ஓடி கூறியது.
சிங்கப்பூர் ஜூன் முதல் நாள் தொடங்கி மலேசிய அரசாங்கத்திடம் அத்திட்டம்மீதான அதன் நிலைப்பாட்டை அரசந்திர வழிகளில் தெளிவுபடுத்தும்படி கேட்டுக்கொண்டு வந்திருப்பதாக எம்ஓடி தெரிவித்தது.
மலேசிய அரசாங்கம் அத்திட்டம்மீது பேச்சு நடத்த விரும்பினால் ஜூலை 31க்குள் பேச்சுகளைத் தொடங்கி இருக்க வேண்டும்.
“2018 ஆகஸ்ட் 1-இல் கூட மலேசியா சந்திப்புக்கு நாள் ஒன்றைக் குறிப்பிடவில்லை”, என எம்ஓடி நேற்ரிரவு ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
இதனிடையே, பேச்சுகளை இம்மாதம் வைத்துக்கொள்ளலாம் என முகம்மட் அஸ்மின் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.