பல்கலைக்கழக மாணவர் சங்கங்களும் அரசுசார அமைப்புகள் சிலவும் பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டம்(யுயுசிஏ) 1971-ஐ அகற்ற ஐந்தாண்டுகள் ஆகும் என பக்கத்தான் ஹரப்பான் அரசு கூறுவதை ஏற்கத் தயாராக இல்லை. ஐந்தாண்டுகள் என்பது நீண்ட காலம் என்றும் ஒரு சட்டத்தை அகற்ற அவ்வளவு நீண்ட காலம் ஏன் என்றும் அவை கேள்வி எழுப்பின.
உயர்க் கல்விக்கழகங்களில் கல்விச் சுதந்திரத்துக்காக போராடும் அந்தக் கூட்டமைப்பு(ஜிபிஏ-ஐபிடி) அச்சட்டத்தை அகற்றுவதில் “தாமதம் கூடாது” என்றும் சாக்குப்போக்குகள் தேவையில்லை என்றும் கூறியது.
“ஐந்தாண்டுகள் என்பது நீண்ட காலம். அது பக்கத்தான் ஹரப்பான் அதன் வாக்குறுதியை நிறைவேற்றாதிருக்கக் கூறும் சாக்குப்போக்குபோல் தெரிகிறது. அவ்வளவு நீண்ட காலத்துக்கு மாணவர்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசாங்கத்தின் பிடியில் கட்டுண்டுக் கிடக்க நேரும்”, என ஓர் அறிக்கையில் கூறியது.
அந்தக் கூட்டமைப்பு யுயுசிஏ-யை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் 12-பேரடங்கிய குழுவில் மாணவர் பிரதிநிதிகளுக்கும் இடமளிக்கப்பட வேண்டும் என்றும் கோரியது.
புதிய சட்டமொன்று கொண்டுவரப்படுவது ஏன் என்றும் அது வினவியது.
“யுயுசிஏ-க்கு முன்னர், மலாயாப் பல்கலைக்கழகம் 1961 சட்டத்தைத் தவிர மாணவர் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் சட்டம் எதுவும் இல்லை. அந்தச் சட்டம்கூட பல்கலைக்கழகம் அமைக்கப்படுவது பற்றித்தான் குறிப்பிடுகிறதே தவிர மாணவர்களின் செயல்களைக் கட்டுப்படுத்தவில்லை”.
புதிய சட்டத்துக்குப் பதில், பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான விதிமுறைகளை உருவாக்கும் அதிகாரத்தைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவிடமும் மாணவர் அமைப்புகளிடமும் கொடுக்க வேண்டும் என்று அது கோரியது.