அந்நியத் தொழிலாளர்களே இல்லை என்ற நிலை வந்தால்..! குமுறல்!

நாட்டில் மில்லியன் கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சட்டப் பூர்வமாகவும் சட்டத்திற்கு புறம்பாகவும் உள்ளனர். ஆனால், இந்த நாட்டில் உணவகத் தொழில் செய்கின்ற எனக்கு சட்டப்பூர்வமான முறையில் ஐந்தே ஐந்து தொழிலாளர்கள் கிடைக்காமல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தான் படுகின்ற துன்பத்திற்கு அளவே இல்லை.

எத்தனைரோ வழியில் போராடியும் தன்னுடைய உணவகத்திற்கு பணியாள் கிடைக்கவே இல்லை. இதை அரசாங்கம் எண்ணிப் பார்ப்பதில்லை என்று மலேசிய இந்திய உணவக உரிமையாளர் நல சங்க(பிரிமாஸ்) ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரிமாஸ் உறுப்பினர் ம.முனியாண்டி(பந்திங்) என்ற உணவக உரிமையாளர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பிரிமாஸ் 18-ஆவது ஆண்டுக் கூட்டம், அதன் தலைவர் முத்துசாமி திருமேனி தலைமையிலும் கௌரவத் தலைவர் டத்தோ ரெ.இராமிலிங்கம் முன்னிலையிலும் கோலாலம்பூர் நேதாஜி மண்டபத்தில் ஆகஸ்ட் முதல் நாள் பிற்பகலில் நடைபெற்றது.

நாட்டுப் பண்ணுடன் தொடங்கிய இக்கூட்டத்தின் வரவேற்புரை, தலைமை உரை, சிறப்புரை, ஆண்டறிக்கை-கணக்கறிக்கை நிறைவேற்றம் எல்லாம் எப்போது முடியும் என்று காத்திருந்த பிரிமாஸ் உறுப்பினர்கள், தங்களின் கருத்துகளை தெரிவிக்கும் நேரம் வந்ததும் பிலுபிலுவென கிளம்பியதுடன் ஒருவர் மாற்றி ஒருவரென ஒலி வாங்கியை தன்வயப்படுத்திக் கொண்டனர்.

“நாட்டில் அந்நியத் தொழிலாளர்களே இல்லை என்ற நிலை வந்தால் அப்போதைய கணக்கு வேறு; ஆனால், இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் சட்டத்திற்கு புறம்பாக பல்துறை சார்ந்து இந்த நாட்டில் வேலை பார்க்கின்ற நிலையில்,

நான் நாட்டின் சட்டதிட்டத்தை மதிப்பதுடன் லெவி கட்டவும் தயாராக இருப்பதுடன் தொழிலாளர்களின் வசிப்பிடம் குறித்து அரசாங்கம்(தொழிலாளர் நலத் துறை) வகுத்துள்ள நெறிமுறையையும் பின்பன்றத் தாயாராக இருக்கும் நிலையில் தன்னுடைய உணவகத்தில் பணிபுரிய அந்நியத் தொழிலாளர் கிடைப்பதில் ஏன் இத்தனைத் தடைக்கல்”

என்று ஈப்போவைச் சேர்ந்த இன்னொரு உணவக உரிமையாளரும் பிரிமாஸ் அங்கத்தினருமான கேசவன் முருகேசன் மனம் கொதிக்கப் பேசினார்.

மருத்துவத் துறைப் பணியாளர்கள், காவல் துறையினர், ரேலா உள்ளிட்ட பாதுகாவல் பணியில் ஈடுவோர், வாடகைக் கார் ஓட்டுநர்கள், சுற்றுப் பயணிகள் உள்ளிட்ட தரப்பினர் இரவுபகல் பாராமல் செயல்படுவதற்கும் குறிப்பாக இரவு வேளையில் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு உணவகத் துறை ஆற்றி வரும் பங்கை அரசாங்கம் உரிய முறையில் சீர்தூக்கிப் பார்ப்பதில்லை.

இல்லாவிடில், எங்களை இந்த அளவிற்கு அலைமோத விடமாட்டார்கள் என்று பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த இன்னொரு உணவக உரிமையாளரும் பிரிமாஸ் உறுப்பினருமான கந்தசாமி நடேசன் பேசி முடித்ததும் நீண்ட நேர கைத்தட்டலைப் பெற்றார்.

உழைத்து உழைத்து உடல் மெலிந்து சுகாதாரப் பிரச்சனைக்கு ஆளான மனைவி, நாங்கள் படுகின்றன் இன்னலைப் பார்த்து உணவகத் தொழிலையே வெறுக்கின்ற பிள்ளைகள் இவர்களுக்கு நடுவே உணவகத் தொழிலை தொடரும் நான் ஆள்பல பற்றாக்குறையால் படும் இன்னல் சொல்லி மாளாது என்று வெள்ளி மாநிலம் மெங்களம்புவைச் சேர்ந்த சார்லஸ் த/பெ அந்தோணிசாமி தன் உள்ளக் குமுறலைக் கொட்டித் தீர்த்தார்.

காலம் கடந்து கொண்டிருக்கின்ற நிலையிலும் கருத்து தெரிவிக்க விரும்பும் அனைத்து உறுப்பினர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் நிலையில், பிரிமாஸ் உறுப்பினர்கள் தங்களின் கருத்தையும் எண்ணத்தையும் சாந்தமான முறையில் வெளிப்படுத்தும்படியும் அனைத்து உறுப்பினர்களின் கருத்தும் தொகுக்கப்பட்டு அரசாங்கத் தரப்பிடம் குறிப்பாக மனித வள அமைச்சரிடம் வழங்கப்படும் என்று பிரிமாஸ் தேசியத் தலைவர் முத்துசாமி திருமேனி அறிவுறுத்தியபின் தொடர்ந்து பேசிய உணவக உரிமையாளர்கள் சற்று நிதானத்துடன் தங்களின் கருத்தை தொடர்ந்து முன் வைத்தனர்.