தேசிய சேவை(என்எஸ்)ப் பயிற்சித் திட்டத்தை வைத்திருப்பதா, எடுப்பதா என்பதை அமைச்சரவை முடிவு செய்யும் என்கிறார் தற்காப்பு அமைச்சர் முகம்மட் சாபு.
அத்திட்டம் அதன் குறிக்கோள்களை அடையவில்லை என்பதாலும் பொருளியல் விரயத்தைத்தான் ஏற்படுத்தியுள்ளது என்பதாலும் அது எடுக்கப்படும் என பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் அறிக்கை கூறியிருந்தாலும் உள்ளூர் பல்கலைக்கழகங்கள் அது பயனுள்ள திட்டம் என்று கருதுவதாக அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட தரப்புகளின் கருத்துகளைக் கேட்டறிந்த அமைச்சு அத்திட்டத்துக்குப் புத்துயிர் கொடுப்பது பற்றி ஆராய ஒரு குழுவை அமைத்திருப்பதாக முகம்மட் கூறினார்.
குழுவின் முடிவுகள் அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்படும் என்றாரவர்.
அத்திட்டத்தைத் தொடர்வதாக இருந்தால் அரசாங்கம் முதலில் அதில் உள்ள ஓட்டைகளை அடைக்கும் என்றவர் சொன்னார்.
“2004-இல் அத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து அதற்கு ஆன மொத்த செலவு ரிம8.43 பில்லியன். நினைக்கவே பயமாக இருக்கிறது”, என இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது முகம்மட் கூறினார்.
அதில் 83 விழுக்காடு தேசிய சேவை முகாம்களின் வாடகைக்குச் சென்றது.