பிகேஆர் இரண்டு அணிகளாகப் பிரிந்து, ஒன்று அன்வார் இப்ராகிமையும் மற்றது பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டையும் ஆதரிப்பதாகக் கூறப்படுவதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று கூறும் அஸ்மின் அலி, அம்னோதான் கதைகட்டி விடுகிறது என்றார்.
“அதில் துளியும் உண்மையில்லை”, என இன்று பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் அஸ்மின் கூறினார்.
“இப்படிப்பட்ட கதைகளைப் பொருட்படுத்தாதீர்கள்”, என்று பிகேஆர் துணைத் தலைவர் கேட்டுக்கொண்டார்.
அன்வாரைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள மகாதிருக்குப் பெரிதும் பயன்படுபவர் என்று எதிர்க்கட்சிகளால் வருணிக்கப்படுபவர் அஸ்மின் அலி.
ஆனால், அவர் எதிர்க்கட்சிகளின் அக்கூற்றை மறுத்தார். அன்வாரே பல முறை மகாதிர் தலைமைக்குப் பிளவுபடாத ஆதரவு தெரிவித்துக் கொண்டிருப்பதைப் பொருளாதார விவகார அமைச்சருமான அஸ்மின், சுட்டிக்காட்டினார்.
அதன் தொடர்பில் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஹரப்பான் அரசாங்கத்துக்குத் தலைமை ஏற்றுள்ள மகாதிருக்கு ஆதரவு கொடுக்குமாறு பிகேஆர் உறுப்பினர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார் என்று அஸ்மின் கூறினார்.
“அதனால் (பிளவு என்ற பேச்சை) நம்பாதீர்கள். அது ஹரப்பானைப் பிரிக்க அம்னோ கையாளும் தந்திரம்”, என்றும் சொன்னார்.
மற்றொரு விவகாரம் பற்றிப் பேசுகையில், ஆகஸ்ட் 4 சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தலுக்குப் பின்னர் பிகேஆர் கட்சித் தேர்தலில் போட்டியிடும் திட்டம் குறித்துத் தெரிவிப்பதாக அவர் வாக்குறுதி அளித்தார்.
போட்டியிட முடிவு செய்தாயிற்றா என்று வினவியதற்கு, “சுங்கை கண்டீஸ் இன்னும் முடியவில்லை. அதன் பிறகுதான் எல்லாம்”, என்றார்.