குறைந்தபட்ச சம்பளம் ரிம1,500 என்று நிர்ணயம் செய்வதற்கு வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து வெவ்வேறு வகை எதிர்வினைகள் கிடைத்துள்ளன.
மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியுசி), குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்படுவதற்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக அதன் தலைவர் அப்துல் ஹாலிம் மன்சூர் கூறினார். ஆனால், சம்பளத்தை உயர்த்துமாறு எந்தத் தரப்புக்கும், குறிப்பாக முதலாளிகளுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என்றாரவர்.
.“எல்லாத் துறைகளிலும் உள்ள உள்ளூர் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளம் அமல்படுத்தப்பட வேண்டும்”, என்றவர் நேற்று பெர்னாவிடம் தெரிவித்தார்.
ஆனால், மலேசிய முதலாளிகள் சங்க செயல்முறை இயக்குனர் ஷம்சுடின் பர்தன் சம்பள உயர்வின் முழுச் சுமையையும் முதலாளிகள்மீது ஏற்றி வைப்பது நியாயமல்ல என்றார்.
“பக்கத்தான் ஹரப்பான் அதன் தேர்தல் அறிக்கையில் குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்படும் வேளையில் சம்பள உயர்வு எவ்வளவோ அதில் 50விழுக்காட்டைக் கொடுத்துதவுவதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அரசாங்கம் இப்போது உதவிப்பணம் கொடுப்பதற்கு வசதியில்லை என்று கைவிரிக்கிறது.
“அரசாங்கம் பண உதவி செய்வதாக உறுதி கூறிவிட்டு இப்போது 100விழுக்காடு சம்பள உயர்வையும் முதலாளிகளே கொடுக்க வேண்டும் என்பது நியாயமா?”, என்றவர் வினவினார்.
பெர்னாமா