கம்யூனிஸ்ட் என்று குற்றம் சாட்டிய நஜிப், அம்னோவை கிட் சியாங் சாடினார்

14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர், மிரட்டல், வெறுப்பு மற்றும் பொய்களுக்கு எதிராக மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவற்றை எதிர்த்து போராடுமாறும் மக்களை லிம் கிட் சியாங் இன்று வலியுறுத்தினார்.

இன, மதத் தீவிரவாதத்தைப் பரப்புவது நிலைமையை மேலும் ஆபத்தாக்கும் என்று அந்த டிஏபி மூத்தத் தலைவர் எச்சரித்தார்.

தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று குற்றம் சாட்டும் புலனச் செய்தியைத் தான் பார்த்ததாக லிம் இன்று ஒரு பத்திரிக்கை அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் அவர் ஒரு மேற்கோள் செய்தியையும் பகிர்ந்து கொண்டார்: “ஃபுனான், சீனாவில் பிறந்த லிம் கிட் சியாங், 1957-ல் தனது தந்தையுடன் மலாயாவுக்கு வந்தார். அவர்கள் பத்து பஹாட், ஜொகூரில் மலாய்க்காரர்களின் அரவணைப்பைப் பெற்றனர்.

“அப்போது லிம் கிட் சியாங்கிற்கு 16 வயது. முதலில், லிம் கிட் சியாங்கின் தந்தை கோழி வளர்த்து வந்தார், பின்னர் பன்றி வளர்க்க தொடங்கினார். லி குவான் யூ பத்து பஹாட் பள்ளியில் பயின்று வந்தார். கம்யூனிஸ்ட் மற்றும் யூத கொள்கைகளில் லீ குவான் யூதான் லிம் கிட் சியாங்கின் ஆசிரியர்.

“மலாயாவில் 1948-ல் தொடங்கிய அவசரகாலம், 1960-ல் முடிவடைந்தது. பிரிட்டிஷ் படைகள் மலாயாவை விட்டு வெளியேறிய (சுதந்திரத்திற்கு முன்பு) பின்பு, கம்யூனிஸ்டுகள் 12 நாட்கள் மலாயாவை ஆக்கிரமித்தனர். அச்சமயத்தில், பத்து பஹாட் கம்யூனிஸ்ட்டு பயங்கரவாதத்திற்கு மையமாக இருந்தது.

“லிம் கிட் சியாங் தந்தையின் வீடு ஒரு கம்யூனிச மையமாக மாறியது, மலாய் துருப்புக்களையும் மலாய்க்காரர்களையும் கொன்று குவித்தனர். 1960-இல், லிம் கிட் சியாங்கிற்கு 18 வயதான போது, அவர் கம்யூனிஸ்ட் சீருடையை அணிந்தார்.” இவ்வாறு அப்புலனச் செய்தியில் இருந்ததாக லிம் தெரிவித்தார்.

அச்செய்தியில் பல பொய்கள் இருப்பதாக லிம் சொன்னார்.

இதுபோன்றதொரு புதிய அரசியல் செயலில் இயங்குகின்ற முன்னாள் பிரதமர் நஜிப், அம்னோ மற்றும் அதன் ‘சைபர்’ துருப்புக்களை, இஸ்கண்டார் புத்ரி எம்பியான லிம் சாடினார்.