சிலாங்கூர் அரசு ஷரிகாட் பெங்குலுவார் ஆயர் சிலாங்கூர் ஹொல்டிங்ஸ்(ஸ்ப்லேஷ்) நிறுவனத்தை வாங்கினால் அதன் இலவச குடிநீர் திட்டம் முடிவுக்கு வரலாம் என்று நினைக்கிறார் முன்னாள் மந்திரி புசார் காலிட் இப்ராகிம்.
இது ஏனென்றால், 2013 தாம் மந்திரி புசாராக இருந்தபோது கொடுக்க முன்வந்த விலையைவிட இன்றைய மாநில அரசு 10 மடங்கு அதிகமாகக் கொடுக்க விருப்பதாக காலிட் இன்று முகநூல் பதிவு ஒன்றில் கூறினார்.
“இது எனக்கு வியப்பளிக்கவில்லை. 2014-இல் நான் சிலாங்கூர் மந்திரி புசார் பதவியிலிருந்து விலகியதற்கு இதுவும் ஒரு காரணம். பிகேஆர் தலைவர்களில் சிலர் ஸ்ப்லேஷுக்குக் கூடுதல் விலை கொடுக்க விரும்பினார்கள். ஆனால் , மக்களின் நலன் கருதி அதற்கு நான் உடன்படவில்லை”, என்றவர் கூறினார்.
“இன்றைய மாநில அரசின் உத்தியால் ஸ்ப்லேஷ் பங்குதாரர்களுக்கு அளவுமீறீய ஆதாயமும் இழப்பீடும் கிடைக்கப்போகிறது.
“அதேவேளை, கூடுதல் கட்டணம் செலுத்தப்போகும் மக்களுக்கு அது பெரும் சுமையாக அமையும்”, என்றாரவர்.